மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி

Read Time:5 Minute, 38 Second

மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராஜருக்கு முதல்வராக இருந்த கருணாநிதி இடம் ஒதுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால் தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

அரசின் அறிவிப்புக்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  திமுகவின் மனு மீது உயர்நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க இயலவில்லை என்பது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக திமுக எதிராக வழக்கு தொடர முடியாது. இடம் ஒதுக்க முடியாததற்கு “மத்திய அரசின் விதிகளே காரணம்” என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக தரப்பில் வாதிடுகையில், அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது. சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார்.

அதனால் அவரது நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்  என்று வாதிடப்பட்டது.

காமராஜருக்கு  ஒதுக்கப்படவில்லை

மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கருணாநிதிக்கு இடம் அளிக்கத் தமிழக அரசு மறுத்ததற்கான காரணம் என்ன என்பதை  கூறுங்கள் என்று தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அப்போது தமிழக அரசு தரப்பில்  ‘‘காந்தி மண்டபம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வது வேண்டாம் என்று சொல்வது தலைவர்களை அவமரியாதை செய்வதாகும். அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய தலைவர் பெரியாருக்கு மெரினாவில் நினைவிடம் இருக்கிறதா?  மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14ஐ எப்படி மீறுவதாகும்? அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை ” என்று வாதிடப்பட்டது.

முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழக அரசின் விதிமுறைகளில் இடம் இல்லை. கருணாநிதி ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜானகிக்கு இடம் மறுக்கப்பட்டது. திமுக தலைவர் மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் வேண்டுமென்றே திமுக அரசியலாக்குகிறது. முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜானகி அம்மாள் விவகாரத்தில் கருணாநிதி என்ன நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழக அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்களையும், பதவியில் இருக்கும்போது இறந்தவர்களையும் மரபுகள்படி ஒரேமாதிரியாகக் கருத முடியாது எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மெரினாவில் இடம் 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம்  மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.