இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல்…

Read Time:6 Minute, 43 Second

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட விலையை விட தற்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது. இதனை மறுக்கும் பா.ஜனதா அரசு, விபரங்களை வெளியிட மறுக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஜோரி (பா.ஜனதா) மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர்.

சிஏஜி தணிக்கை

அப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கணக்கீட்டு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு (சிஏஜி) தணிக்கையை மேற்கொள்ள வேண்டும், அதுதொடர்பான அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒப்பந்தத்தின் பின்னால் உள்ள உண்மையை அம்பலப்படுத்துவதில் நியாயமற்ற நிலையை மோடி அரசு மேற்கொள்கிறது எனவும் குற்றம் சாட்டினர்.

யஷ்வந்த் சின்கா பேசுகையில், “காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் எழுப்பி வருகிறது. பொது கணக்கு குழு விசாரணையை கோரி வருகின்றன. ஆனால், இப்போதைய பாராளுமன்ற காலம் முடிவடைய உள்ளது. எனவே தணிக்கையை மேற்கொண்டு அறிக்கையை அளிக்க முடியாது. எனவே கால நிர்ணயம் செய்யப்பட்ட சிஏஜி தணிக்கையை மேற்கொள்ள வேண்டும், இதனை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்,” என்றார்.

பிரசாந்த் பூஷண் பேசுகையில், இது குற்றவியல் தவறான நடத்தையாகும், பொது அலுவலகத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும்
தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பின் இழப்பில் கட்சிகளை செழுமைப்படுத்தும் நடவடிக்கையாகும். பிரதமர் அளவில் ஒப்பந்தம் நடைபெற்று உள்ளதால், அதுபற்றி யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு கிடையாது. அவரே அதற்கு பொறுப்பானவர் என கூறினார்.

பாதுகாப்பு ஊழல்

இதற்கிடையே அருண் ஜோரி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் என குற்றம் சாட்டினார்.

“ரபேல் விமான ஒப்பந்தத்துடன் ஒப்பிடும் போது போர்பஸ் ஊழல் ஒன்றும் கிடையாது. இதுதொடர்பான செய்திகளை முழுமையாக வெளியிட்டவனாக இதனை சொல்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான அரசு குறைந்த விலையில் 126 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. எப்படி விமானங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது? விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க விமானப்படையில் இருந்து யாரும் கேட்கவில்லை என்பதை ஸ்திரமாக சொல்கிறேன். ரூ. 1000 கோடிக்கும் அதிகமான தொகையுடன் இப்போதைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டினார் அருண் ஜோரி.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளியிட கூறும் அருண் ஜோரி, விமானம் வாங்குவதில் விலை தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முந்தைய ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னதாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவையின் ஒப்புதலை பெறவில்லை, புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக அதுதொடர்பான எந்தஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுபவம் இல்லாத தனியாருக்கு ஒப்பந்தம்

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், போர் விமானங்களைத் தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்ட விவகாரத்திலும் மத்திய அரசை மூவரும் கடுமையாக சாடினர். பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தை நிராகரித்துவிட்டு ரிலையன்ஸ் இழுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளாக விமான தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஆதாயம் பெறுவதற்காக அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர்.

“தனியார் நிறுவனம் (ரிலையன்ஸ்) ரபேல் போர் விமானம் தயாரிக்கும் நிறுவனமான டாசால்ட் உடன் இணைந்துள்ளது, இதில் எங்களுடைய பங்கு எதுவும் கிடையாது என அரசு கூறுகிறது. ஆனால் அரசின் விதிமுறைகளிபடி, இதனை பாதுகாப்பு துறை அமைச்சர்தான் அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறது,” என்று அருண் ஜோரி கூறியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மூவரும் பேசியுள்ளனர்.