கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, 26 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணை திறப்பு

Read Time:3 Minute, 32 Second

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 22 அணைகள் நிரம்பி திறக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத பேய் மழை காரணமாக நேரிட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 24 மணிநேரத்திற்கு மேலாக பெய்யும் மழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
வயநாடு மாவட்டம் நிலச்சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் ஆபத்தான கட்டத்தை தாண்டி செல்கிறது. வரலாற்றில் முதல்முறையாக 22 அணைகள் நிரம்பும் தருவாயில் திறக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளச் சேதங்கள் குறித்து விரைவில் மத்திய அரசிடம் தெரிவிப்போம் என்றார்.

குட்டநாடு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே 11-ம் தேதி நடக்க இருந்த நேருக்கோப்பைக்கான படகுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார். மாவட்ட அதிகாரிகள் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

இடுக்கி அணை திறப்பு

கனமழை காரணமாக ஆசியாவில் மிகப்பெரிய வளைவு அணையான இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டும்தருவாயை எட்டியது. இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,403 அடியாகும், அணையில் 2,399 அடி நீர் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக செருதோனி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து மூன்றாவது எச்சரிக்கையும் விடப்பட்டு மேலும் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டது.