நீலகிரியில் யானை வழித்தடங்களில் உள்ள 27 தனியார் ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Read Time:6 Minute, 46 Second

நீலகிரியில் யானை வழித்தடங்களில் உள்ள 27 தனியார் ரிசார்ட்கள், ஓட்டல்களுக்கு 48 மணி நேரங்களில் ‘சீல்’வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள் யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அப்பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் வன விலங்குகள் தங்கள் நிலங்களுக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு சுவர்கள், முள் வேலிகள் மற்றும் மின் வேலிகளை அமைத்திருந்தனர். இதனால், யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு யானைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக 2008 முதல் 2010 வரையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அடிப்படையில்
யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. யானைகள் வழித்தடம் தொடர்பாக வன அதிகாரிகள் அடங்கிய நிபுணர்கள் குழு வரைப்படத்தையும் வெளியிட்டது. இதனையடுத்து யானைகள் வழித்தட பகுதிகளில் ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுக்களின் வேலிகள் மட்டுமே அகற்றப்பட்டன. கட்டிடங்கள் ஏதும் அகற்றப்படவில்லை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இதை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் 32-க்கும் மேற்பட்ட ரிசார்ட் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு, நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமானப் பணிக்குத் தடை கோரி, ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலையில் விசாரணை நடைபெற்ற போது மனுதாரர்களில் ஒருவரான யானை ராஜேந்திரன் ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது’’ என வாதிட்டார்.

சட்டவிரோதமாக ரிசார்ட்கள் மற்றும் ஓட்டல்கள் கட்டப்படுவதால், யானைகள் பாதிக்கப்படுவதுடன் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க வேண்டும்.

பருவமழை காலத்தின்போது தமிழக காடுகளுக்குள் 18 ஆயிரம் யானைகள் இடம்பெயர்கின்றன. இவற்றின் வழித்தடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிப்பதுடன், முழுமையாக மூட உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

48 மணி நேரங்களில் ‘சீல்’

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்தார். அதில் 39 ரிசார்ட், ஓட்டல்களின் பெயர் இடம்பெற்று இருந்தது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்’’ என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும், அனுமதி அளிக்கப்படாமல் கட்டப்பட்டு இருந்தால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கையை எடுத்து சீல் வைக்கலாம் எனவும் உத்தரவிட்டது என livelaw செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த உத்தரவு யானைகள் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.