அன்று விஷம பிரசாரம் செய்த கேரளாவை இன்று காப்பாற்றும் முல்லைப் பெரியாறு அணை!

Read Time:13 Minute, 2 Second

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் பெரியாற்றுடன் 5 சிறுநதிகள் இணைகிறது. அதனுடன் முல்லையென்ற ஆறும் ஆறாவதாக இணைகிறது. இப்படி 7 ஆறுகள் ஒன்றாக இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கிறது. கேரளாவில் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது. மலைகள் நிரம்பிய கேரளா விவசாயத்திற்காக பெருமளவு முல்லைப் பெரியாற்றை நம்பியிருக்கவில்லை. இவ்வாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து, சென்றடையும் இடத்துக்கும் பயன்தராமல் பெருமளவு நீர் வீணாகக் கடலில் போய் சேர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணை

பெருமளவு ஆற்றின் நீர் கடலுக்கு சென்ற நிலையில் மறுபுறம் தமிழகம் வறட்சியை எதிர்க்கொண்டது. இதனை தடுக்கும் வகையில் முல்லைப் பெரியாற்றின் இடையே அணையை கட்டும் யோசனை எழுந்தது.

முதல்கட்ட நடவடிக்கையை ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி தொடங்கினார். நீரை தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தும் வகையில் காடு, மலைகளுக்குள் இடம் பார்க்கப்பட்டது. இதற்கு பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். பின்னர் பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் .

கடின உழைப்புடன் பெரும்பாலான சவால்களை எதிர்க்கொண்டு 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை திறக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவு 152 அடியாகும். பெரியாற்றை தடுப்பது மட்டுமே இதனுடைய பணியாகும். அணையிலிருந்து நீர் வெளியேற்றும் மதகுகள் 13 ஆகும். அணையில் நீர்போக்கிகள், உபரி நீர் வெளியேறும் மதகுகள் என பிரதான சுவரில் எதையும் பார்க்க முடியாது. அங்கு நீர் தேங்கும் இடம், உபரிநீர் வெளியேறும் இடம், தமிழகத்துக்கு நீர் எடுக்கும் சுரங்கப்பகுதி என அனைத்துமே ஒவ்வொரு திசையில் இருக்கிறது. அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும்.

அணையில் தேங்கும் நீர் கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்கும் சுரங்க பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பும் வகையில் மலை பாறையில் குடையப்பட்ட சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 122 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணமாகும்.

1922, 1924, 1943 ஆகிய ஆண்டுகளில் அணை நிரம்பி கேரளப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்நிலையில் பெரியாறு அணை நீர் மூலம் நீர்மின் உற்பத்தி செய்யும் தமிழகத்தின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு. சென்னை மாகாண முதல்-அமைச்சாரக இருந்த காமராஜர் மேற்கொண்ட முயற்சியால் 1958 அக்டோபர் 12-ல் மின் திட்டம் தொடங்கியது.

இதற்காக போர்பே அணையிலிருந்து தலா 400 கனஅடி நீரை கொண்டு வரும் 4 குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்தத் நீர் லோயர் கேம்ப்பிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்த 4 டர்பைன்களில் விழச் செய்து, 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதைக் கேரள அரசால் சகிக்க முடியவில்லை.

கேரளாவின் பேராசையும், இடுக்கி அணையும்

இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து சுமார் 48 கி.மீ. தூரத்தில் 555 அடி உயரம், 1,200 அடி நீளத்தில் இடுக்கி அணையை கேரளா கட்டியது. ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரிய மற்றும் உயரமான அணையாகும். 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டிஎம்சி.க்கும் அதிகம். அதாவது முல்லைப் பெரியாறு அணையை போல் 7 மடங்கு பெரியது.

இடுக்கி அணை மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர் மின் நிலையமும் கட்டப்பட்டது.

கேரளா பேராசையுடன் தொடங்கிய இத்திட்டத்திற்கு தேவையாக எதிர்பார்த்த அளவுக்குத் நீர் அணைக்கு வராததால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் அணையை இவ்வளவு செலவு செய்து ஏன் கட்ட வேண்டும் என அம்மாநிலத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியது. இதற்கு அடுத்துதான் கேரளாவின் பார்வை முல்லைப் பெரியாறு அணையின் மீது விழுந்தது, விஷம பிரசாரத்தை கையில் எடுத்தது.

70 டிஎம்சி.க்கும் அதிகமான அளவு தண்ணீரை தேக்கும் வகையிலான இடுக்கி நிறையாததற்கு காரணம் தமிழகமும் கிடையாது, இயற்கையும் கிடையாது. முல்லைப் பெரியாறு அணையைவிட 7 பெரிதாக கட்டப்பட்ட 555 அடி கொண்ட இடுக்கி அணை நிரம்பாமல் போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? எல்லாம் கேரளாவின் பேராசை மட்டுமே.

விஷம பிரசாரம்

1979-ல் பெரியாறு அணை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக கேரள பத்திரிகை ஒன்றில் தவறான தகவல் வெளியானது.

நிலநடுக்கத்தால் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு அணையில் ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்திதான் அது. 152 அடிவரை தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து, கேரளாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடும் என்றும் விஷப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து ஏற்பட்ட போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அணை பலமாக இருப்பதாகவும், வெள்ளம் ஏற்பட்டால் எவ்விதப் பாதிப்பும் கேரளாவுக்கு ஏற்படாது என அறிவியல் பூர்வமாக தமிழக அரசு ஆதாரங்களை எடுத்துக்கூறியும் எடுபடவில்லை. இதனையடுத்து 1979 நவம்பரில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் போராட்டம் தொடங்கியது.

‘டேம் 999’

இந்த நேரத்தில் முல்லை பெரியாறு அணை உடைந்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதீத கற்பனைகளுடன் கிராபிக்ஸ் முறையில் ‘டேம் 999’ என்ற பெயரில் திரைப்படம் வெளியிடப்பட்டது. 2011-ம் ஆண்டு இப்படத்தை திரையிட அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தடை விதித்தார். ‘டேம் 999’ என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுளாகும். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதனை மையப்படுத்திதான் படத்திற்கு பெயராக வைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறில் அதிக நீரினை தேக்குவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் உண்டாகும் ஆபத்து, அணையில் கசியும் நீரின் அளவு, அணையின் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளின்போது பயன்படுத்திய பொருட்களின் தன்மை, மிகக்குறைந்த ரிக்டர் அளவுகோலில் பதிவாக நிலநடுக்கத்தால் இப்பகுதிகளில் ஏற்பட்ட தாக்கம் என்பன குறித்து குழு ஒன்று ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கை, பூகம்பத்தால் அணைக்கு மிகப்பெரிய அளவில் ஆபத்து இருக்கிறது என கேரளவின் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கியது.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆய்வு முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2014 மே மாதம் 7-ம் தேதி விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் கேரள அரசினை தலையில் ஓங்கி குட்டியது. அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம், பேபி அணையையும் பலப்படுத்தி நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 142 அடியை முத்தமிட்டது.

கேரளாவை காப்பாற்றுகிறது

முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில் உள்ளது. ஆனால் இடுக்கி அணை அதன் அடிவாரத்தில் இருக்கிறது. முல்லை பெரியாற்றிலிருந்து நீர் அதிகமாக சென்றாலும் காடுகள் வழியாகவே செல்லும், இடையில் ஊர்கள் எதுவும் கிடையாது. இடுக்கி அணைக்கே செல்லும். இது கேரளா அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக விஷமம் பரப்பப்படுகிறது. இப்போதும் கேரளா முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நிலையையே கொண்டுள்ளது.

கேரளாவில் 50 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 20க்கும் அதிகமான அணைகள் நிரைந்து வெள்ளமாக செல்கிறது. கேரளாவே வெள்ளத்தினால் மிதக்கிறது. இடுக்கி அணையும் நிரம்பி, 26 ஆண்டுகளுக்கு பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் முப்படைகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியை தாண்டியுள்ளது. இப்போது அணையிலிருந்து தங்கள் பக்கம் நீர் வந்துவிடக்கூடாது என கேரளா மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஏற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை முல்லைப் பெரியாறு அணை பாதுகாத்துதான் வருகிறது.

கேரளாவில் ஆகஸ்ட் 14 வரையில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்ப முடியாது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தொடுத்திருக்கும் வழக்கை பெற்றால் மட்டும்தான் 155 அடிவரையில் அணையில் நீரை தேக்க முடியும். கேரளா விஷம பிரசாரத்தை நிறுத்துமா என்பதைபார்க்கலாம்.