இந்தியா – சீனா நேரடி மோதல் தளமாகும் மாலத்தீவு…

Read Time:7 Minute, 0 Second

சீனாவின் ஆதரவுப்பெற்ற மாலத்தீவின் அப்துல்லா யாமீன் அரசு இந்தியா ராணுவ ஹெலிகாப்டர்களையும், வீரர்களையும் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவும், சீனாவும் நேருக்கு நேர் மோதும் தளமாக மாலத்தீவு ஆகியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு, இப்போது சாலைகள், பாலங்கள், பெரிய விமான நிலையம் ஆகியவற்றை கட்டமைக்கும் பணியில் சீனாவுடன் கைக்கோர்த்துள்ளது. இது, மாலத்தீவுக்கு பல தசாப்தங்களாக ராணுவம் மற்றும் பிற உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு பெரும் அதிருப்தியான செய்தியாகும்.

மாலத்தீவு இந்தியாவுடன் பிரச்சனையை சந்திப்பதற்கு காரணம்?

இவ்வருடத் தொடக்கத்தில் மாலத்தீவில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த மறுத்து, எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நெருக்கடி நிலையை பிரகடனம் செய்த அப்துல்லா யாமீன் அரசுக்கு எதிராக இந்தியா கருத்து தெரிவித்தது. முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம் மற்றும் நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அப்துல் கயூமிற்கு இந்தியா நீண்ட காலமாக உதவியையும், ஆதரவையும் வழங்கியது.

1988-ம் ஆண்டு அவருடைய ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்ட போது இந்தியா ராணுவத்தை அனுப்பி நிலையை 12 மணி நேரத்தில் சரிசெய்தது.

இதேபோன்று, இந்தியாவின் தலையீடும், ராணுவமும் அவசியம் என்று மாலத்தீவு எதிர்க்கட்சிகள் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவின் தலையீடு இருப்பதை உணர்ந்த இந்தியா ராணுவத்தை அனுப்புவது என்பதை நிராகரித்தது. ஆனால் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததை விமர்சனம் செய்தது, இதனால் மலாத்தீவு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது.

இந்தியா தன்னை சுற்றியுள்ள சிறு நாடுகளுக்கு பொருளாதார மண்டலம் மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள உதவிகளை வழங்கி வருகிறது. மாலத்தீவில் ஏற்பட்ட பதற்றம் இந்தியா, சிறு நாடுகளுக்கு வழங்கும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ஹொலிகாப்டர்களை திரும்ப பெற்றுக்கொள்ள மாலத்தீவு அழைப்பு

இந்தியாவிற்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அழித்துள்ள பேட்டியில், இந்தியா, மாலத்தீவுக்கு இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்கியது குறிப்பாக மருத்துவ உதவிக்காக, இப்போது அது தேவையில்லை. எங்களிடமே அதற்கான வளங்கள் உள்ளது. எங்களுக்கு முந்தைய காலங்களில் அது உதவியாக இருந்தது, இப்போது எங்களிடமே போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இருப்பினும் இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து தொடர்ந்து ரோந்து மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

மாலத்தீவில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர்?

ஹெலிகாப்டர்களுடன் இந்தியா விமானிகள் அடங்கிய 50 ராணுவ வீரர்களை வழங்கியுள்ளது. அவர்களுடைய விசா காலம் முடிந்துவிட்டது. அனால் இதுவரையில் அவர்களை திரும்ப பெறுவது தொடர்பாக இந்தியா, மாலத்தீவுடன் பேசவில்லை என கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை சொல்வது என்ன?

இவ்விவகாரம் தொடர்பாக இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் பேசுகையில்,, “நாங்கள் இப்போதும் அங்குதான் உள்ளோம், எங்களுடைய ஹெலிகாப்டர்களும், ராணுவ வீரர்களும் அங்குதான் உள்ளனர்,” என கூறியுள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை கண்காணித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலளிக்கவில்லை என ராய்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் சீனா மாலத்தீவில் 2011-ம் ஆண்டு தூதரகம் அமைத்தது. மாலத்தீவு விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்க கூடாது என இந்தியாவை எதிர்க்கிறது. இப்போது அங்கு சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் கட்டமைப்பு பணிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. தலைநகர் மாலேவில் விமானசேவையை விரிவாக்கம் செய்தற்கான கட்டமைப்பு பணியையும் சீன நிறுவனத்திற்கு வங்கியுள்ளது.

இந்தியாவின் ஜிஎம்ஆருடன் செய்துக்கொண்ட 511 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மாலத்தீவு சீனாவுடன் கைக்கோர்த்து சில தீவுகளில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது மாலத்தீவு.

இவ்விவகாரத்தில் வல்லுநரின் பார்வை எப்படி?

முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியும், இந்திய பெருங்கடல் பிராந்திய அரசியலில் அனுபவம் பெற்றவருமான அபிஜித் சிங் பேசுகையில், “ஏற்கனவே இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதியில்தான் சீனாவின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளது. இப்போது யாமீன் அரசு ஹெலிகாப்டர்களை திரும்ப பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஹெலிகாப்டர்களால் அவருக்கு எந்தஒரு பிரச்சனையும் கிடையாது, அங்கிருக்கும் வீரர்களை வெளியேற்றுவதைதான் அவர் முக்கியமானதாக பார்க்கிறார். இந்தியா தன்னை கண்காணிப்பதாக பார்க்கும் யாமீன், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்த்துள்ளார்,” என குறிப்பிடுகிறார்ர். இதுதொடர்பாக மாலத்தீவு தூதர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.