கேரளாவை காப்பாற்றும் காமராஜர் கட்டிய அணை!…

Read Time:5 Minute, 19 Second

கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, வாலையார் அணை, கிருஷ்ணகிரி அணை, பேச்சுப்பாறை அணை, ஆழியாறு அணை, பரம்பிக்குளம் அணை, குந்தா அணை கட்டப்பட்டது. இதுபோன்று ஏரளமான நீர் பாசன திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக காமராஜர் முன்னெடுத்த திட்டங்கள் ஏராளம். இப்போது அவருடைய முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட அணை பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவை காப்பாற்றி வருகிறது.

தண்ணீருக்காக போராடும் தமிழகம் அண்டைய மாநிலங்களுக்கு ஒரு வடிகாலாகத்தான் தெரிகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே கேரள மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் மலை நிறைந்த கேரளாவில்தான் சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி மாநிலத்தை வளப்படுத்துகின்றன. இருப்பினும் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் மல்லுக்கு நிற்கிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளாவில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை தமிழர்கள் முயற்சியால் உருவானது.

ஆம், 1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது. இந்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இப்போது 50 ஆண்டுகாலமாக இல்லாத அளவு பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவை காமராஜர் கட்டிய இந்த அணையும் காக்கிறது. கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இடுக்கி, வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அணைகள் நிறைந்து வெள்ளமாக செல்கிறது. கேரளாவில் பெரிய அணையான இடுக்கி அணையும் வெள்ளம் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக கேரளாவின் மிகப்பெரிய அணையாக இருக்கும் அணைதான் மலப்புழம் அணையாகும். பாலக்காடு மாவட்டத்தின் குடிநீர் தேவையை கருதியும், விவசாயத்தில் நெல் விளைச்சலை அதிகரிக்கும் வகையிலும் 1949-ம் ஆண்டு பிரமாண்ட அணையை கட்ட சென்னை மாகாண அரசு முடிவுசெய்தது.

கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பரதப்புழாவின் துணை நதியான மலம்புழா ஆற்றில் பிரமாண்ட அணை கட்ட தீர்மானிக்கப்பட்டது. பாலக்காடு நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் மலம்புழா அணை உள்ளது. இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது.

இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது.

அப்போதைய சென்னை மாகாண முதல்-அமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது. 1954-ம் ஆண்டு மலம்புழா அணையை திறந்துவைத்தார் காமராஜர்.  ரூ 5 கோடியில் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் அவரின் மேற்பார்வையில் இந்த அணை கட்டப்பட்டது.

இதேபோன்று அணையின் கட்டுமானப் பணியில் உடல் உழைப்பை கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். தமிழர்கள் இருவரின் திட்டமிடுதலாலும், தமிழர்களின் உழைப்பாலும் 355 அடி உயரத்துக்கு மிக பிரமாண்டமாக எழுந்து நிற்கும் மலம்புழா அணை இன்று கேரளாவை வெள்ளத்திலிருந்தும் காத்துவருகிறது!. பருவமழை தீவிரமடைந்து மழை பெய்வதால் மலப்புழா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது.

குறள்:

கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

ஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.