சூரியனை தொட புறப்பட்டது நாசா விண்கலம்! சூரிய வெப்பத்தினால் உருகாது, ஏன்?

Read Time:11 Minute, 25 Second

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும், ‘பார்க்கர் சூரிய ஆய்வு’ விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சூரியனில் இதுவரை கண்டறியப்படாத உண்மைகளை கண்டறியும் முயற்சியாக, அதற்கு மிக அருகே விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தை நாசா கடந்த 2009-ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக  அமெரிக்க பட்ஜெட்டில் பார்க்கர் சோலார் புரோப் விண்கலத்தை தயாரிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 1.5 பில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி).
விண்கலத்தை மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரிலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் இயற்பியல் ஆய்வகம் வடிவமைத்தது.

ஃபுளோரிடா மாகாணம் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து  பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 1 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ‘டெல்டா 4-ஹெவி ராக்கெட்’ மூலம்  விண்கலம்  விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆளில்லா விண்கலம் ஒரு கார் அளவில் உருவாக்கப்பட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, நமது சூரிய வளி மண்டலத்தில் சூரியனுக்கு மிகமிக அருகில் சென்று இது ஆய்வு செய்யும்.

சூரிய புயல் குறித்து ஆய்வு

பூமியை தாக்கும் சூரியப் புயல் எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்து தகவல்களை பூமிக்கு அனுப்புவதே விண்கலத்தின் பணியாகும். சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் வெளிப்படுகின்றன. இதனால் பூமியில் சில நேரங்களில் தொலைத்தொடர்புகள், மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த பார்க்கர் விண்கலம் காந்தப் புயல்கள் குறித்த ஆய்வில் முக்கியமாக ஈடுபடுகிறது.

சூரியனை சுற்றியுள்ள ஒளிவட்டத்தை ஆய்வு செய்யும். சூரியனை குறித்து இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.

6 ஆண்டுகள்

இதுவரை எந்த விண்கலமும் நெருங்காத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024-ம் ஆண்டு சென்றடைகிறது.

பார்க்கர் சோலார் புரோப் சுமார் 6 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா கூறியுள்ளது. அந்த விண்கலம், தனது வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாகவும், சூரியனை தொடுவதற்கான தனது பயணத்தை அது சுயமாகவே தொடங்கியதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

சூரியனை தொட செல்கிறது 

சூரியனை தொலைவில் இருந்து மட்டுமே ஆய்வு செய்யும் நிலை உள்ளது. அதற்கு சூரியனின் வெப்பம்தான் காரணம்.

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970-ல் விண்வெளிக்கு சென்ற முதல் விண்கலமான ஹீலியஸ் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை. இப்போது, சூரியனின் காற்றுமண்டலத்துக்குள் முதல் முறையாக நுழைந்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் பார்க்கர் விண்கலம் அனுப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில்தான், பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு உண்மைகள் பொதிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் பார்க்கர் விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வு, சூரியனை  குறித்தும், பிரபஞ்சத்தை குறித்தும் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனை 24 முறை நீள்வட்டப்பாதையில் வலம் வரும் எனவும், மிகவும் அதிகபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி.மீ. நெருக்கத்தில் கடந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

மிகவும் வேகமானது

மனிதனால் உருவாக்கப்பட்டு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் பொருள் என்ற சிறப்பும் பார்க்கர் விண்கலத்துக்கு உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இன்னும் 6 வாரங்களில் வெள்ளி கிரகத்தைக் கடந்து செல்லும் பார்க்கர் விண்கலம், அடுத்த 6 வாரங்களில் சூரியனை முதல் முறையாக சுற்றிக் கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நொடிக்கு 190 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த விண்கலம்தான், மனிதர்களால் உருவாக்கப்பட்டதிலேயே மிக அதிக வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்கலம் உருகாது

இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலத்தில் 11.43 செ.மீ. தடிமனில் வெப்ப பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 612 கிலோ. 9 அடி நீளமும், 10 இன்ச் கொண்டது. வெப்பநிலையின் ஏற்றம், இறக்கங்களுக்கு ஏற்ற வகையில் அதில் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல மில்லியன் டிகிரி வெப்பநிலையை கொண்ட ஒரு விண்வெளியில் பயணிக்கும் விண்கலத்திற்கு மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வெப்பம் தாங்கும் கவசம் 1,400 டிகிரி செல்சியஸை  (அதிப்பட்சமாக 1,650 டிகிரி செல்சியஸில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது) தாங்கும் வல்லமை கொண்டது.

சூரியனை விண்கலம் நெருங்கும்போது அதிக வெப்பத்தில் வெடித்து சிதறாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தால் கார்பனை கொண்டு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கட்டமைக்கப்பட்டது. இரு கார்பன் தகடுகள் கலவையால் இணைக்கப்படுகிறது. இந்த இலகுரக பாதுகாப்பு கட்டமைப்புக்கு மேல்பரப்பில் முடிந்த அளவுக்கு அதிகமான வெப்பத்தை உள்ளே அனுமதிக்காமல் ரிப்ளக்ட் செய்யும் வகையில் வெள்ளை பீங்கான் போன்ற வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

விண்கலத்திற்கு மற்றொரு சவால் அங்கிருக்கும் வயர்கள் உருகாமல் இருப்பதுதான். சூரியனுக்கு மிகவும் அருகே என்ற நிலையில் உருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் அங்கு வயர்களை வைக்கும் வகையில் படிக குழாய்களை உருவாக்கியுள்ளனர், நியோபியம் கெமிக்கல் காரணியிலிருந்து வயர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் விண்கலத்தில் பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை என கூறப்படுகிறது.

ஒத்திவைப்பு

கடந்த 2015-ம் ஆண்டே இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ முதலில் திட்டமிடப்பட்டது. எனினும், பல்வேறு நடைமுறை சிக்கல் காரணமாக விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதேபோன்று சனிக்கிழமை அதிகாலை 3.33 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஞாயிறு அன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர் பெயர்

அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்க்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு பார்கர் சோலார் புரோப் என பெயரிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அறிஞரின் பெயர் ஒரு விண்கலத்துக்கு சூட்டப்படுவது இதுவே முதல்முறையாகும்.

யூஜின் பார்கருக்கு 91 வயதாகிறது. விண் இயற்பியல் துறையில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். அவரை கவுரவிக்கும் வகையில், ‘பார்க்கர் சூரிய ஆய்வு’ விண்கலம் என்று நாசா பெயர் சூட்டியுள்ளது. பார்க்கர் பேசுகையில் “சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. அந்த விண்கலம் மிகவும் சிக்கலானது” என்று தெரிவித்தார்.

பூமியை பாதுகாக்க நடவடிக்கை 

பார்கர் விண்கலத் திட்ட விஞ்ஞானி ஜஸ்டின் கஸ்பர் பேசுகையில் ‘‘எதிர்காலத்தில் சூரியனில் இருந்து காந்த புயல்கள் வெளிப்பட்டு பூமியைத் தாக்கும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே அறியலாம். அதன்மூலம் பூமியைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  எதிர்காலத்தில் ஆராய்ச்சிக்காக நிலவு, செவ்வாய் போன்றவற்றில் விண்வெளி ஆய்வில் ஈடுபட செல்பவர்களைப் பாதுகாக்கவும் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகரத்தின் தலைவர் தாமஸ் ஸர்புசென் கூறும்போது, ‘‘எங்கள் விஞ்ஞானிகள் சமூகத்தில் பார்க்கர் விண்கலம் மிகப்பெரிய ஹீரோ’’ என்று வர்ணித்தார்.

பார்க்கர் சோலார் புரோப் என்பது சூரியனுடன் ஒரு சந்திப்புக்கு வழிவகுக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.