ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பா.ஜனதா தோல்வியடையும் – கருத்துக் கணிப்பு

Read Time:3 Minute, 55 Second

ஏபீபி நியூஸ் – சி வோட்டர்ஸ் இணைந்து சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜனதா தோல்வியடையும், அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான்

பா.ஜனதா ஆட்சி செய்யும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் இவ்வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஏபீபி நியூஸ் – சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் 130 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், ஆளும் பா.ஜனதா 57 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 தேர்தலுடன் ஒப்பீடுகையில் அப்படியே மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என பார்க்கப்படுகிறது. 2013-ல் 163 தொகுதிகளை தனதாக்கி பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

இப்போது நடக்கவுள்ள தேர்தலில் காங்கிரஸ் 50.8 சதவித வாக்குகளை தனதாக்கும், இதனையடுத்து பா.ஜனதா 36.8 சதவித வாக்குகளை பெறும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை 12.4 சதவித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்

சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. அங்கு நீண்டகாலமாகவே எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தாண்டி 117 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 106 தொகுதிகளை பிடிக்கும், மற்றவை 7 தொகுதிகளில் வெற்றியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 தேர்தலின் முடிவுகள் அப்படியே மாறுபடும். 2013 தேர்தலில் பா.ஜனதா 165 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. காங்கிரஸ் 58 தொகுதியிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.

வரும் தேர்தலில் காங்கிரஸ் 41.7 சதவித வாக்குகளை பெறும், இதற்கு அடுத்தப்படியாக பா.ஜனதா 40.1 சதவித வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்கார்

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் ராமன்சிங் தலைமையில் பா.ஜனதா அரசு நடைபெற்று வருகிறது. இங்கு வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் பா.ஜனதா 33 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் மற்றவை 3 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 49 தொகுதியிலும், காங்கிரஸ் 39 தொகுதியிலும், மற்றவை 2 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. இனி வரவுள்ள தேர்தலில் காங்கிரஸ் 40 சதவித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவின் வாக்கு 38.8 சதவிதத்திற்கும் குறையும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை 21.3 சதவித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.