மாணவர்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சியை தொடங்குகிறது இஸ்ரோ!

Read Time:4 Minute, 54 Second

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டுவருகிறது. 1965-ல் ராக்கெட்டுக்கு வேண்டிய தளவாடங்களையும், ஏவஉதவும் கருவிகளையும் மாட்டு வண்டியிலும், சைக்கிளிலும் கொண்டு சென்று பயணத்தை தொடங்கிய இஸ்ரோ இப்போது வல்லரசு நாடுகள் மூக்கில் விரல் வைக்கும் வகையில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. செவ்வாய்கோள் ஆய்வை அமெரிக்காவின் நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் மட்டுமே செய்துவந்த வேளையில், இந்தியாவுக்கு அது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால், இதிலும் 2013-ல் மங்கள்யானை நிலைநிறுத்தி இஸ்ரோ முத்திரைப் பதித்தது. பிற நாடுகளைவிட, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறது.

2017, பிப்ரவரி 16 அன்று பி.எஸ்.எல்.வி. சி 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனையை படைத்தது. ‘ஆர்யபட்டா’ தொடங்கி, இன்று PSLV வரை தொடர்ந்து சாதனைகளைப் படைத்துவருகிறது. இந்த நிலையில் இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கத்துடன் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இந்த சேனல் விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக செயல்பட உள்ளது.

இஸ்ரோ தொலைக்காட்சி சேனலில் விஞ்ஞானத்தின் பயன்பாடுகள், முன்னேற்றங்கள் உள்பட தெளிவான விபரங்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளம் பார்வையாளர்கள் மற்றும் கிராம புறங்களில் உள்ளவர்கள் தங்களுடைய மொழியில் எளிமையான முறையில் தெரிந்துக்கொள்ள நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொள்கிறது.

விண்வெளி தொடர்பான அனைத்து நிகழ்வுகளைத் தெரிவிக்கவும் இது உதவும். இஸ்ரோவின் இந்தப் புதிய முயற்சி பயனளிக்கத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இஸ்ரோவின் நிகழ்வுகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

இஸ்ரோவின் தலைவர் சிவன் பேசுகையில், புதிய தொலைக்காட்சி சேனல் மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும், இஸ்ரோ மாணவர்கள் பயிற்சி முகாம்களையும் அமைக்கிறது. 8ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான திறனை வளர்ப்பதற்கான திட்டங்களை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அறிவியல் தொடர்பான செய்தி சென்றடைய வேண்டும், இதுவரையில் அறிவியலுக்கு என்று நம்மிடம் எந்தஒரு தொலைக்காட்சி சேனலும் கிடையாது. இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அறிவுப்பூர்வமான பலதகவல்களை உள்ளடக்கும் விதமாக இந்த டிவி செயல்படும். மாணவர்களின் திறமையை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு என்று கூறியுள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கோள் ஏவுவதை நேரடியாக மக்கள் பார்ப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்றும் சிவன் குறிப்பிட்டார்.

விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக இந்த சேனல் தொடங்கப்பட உள்ளது. சாராபாய் 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இவரே, இஸ்ரோவின் முதல் தலைமை விஞ்ஞானி. இவரது நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. விக்ரம் சாராபாய் தலைமை விஞ்ஞானியாக இருந்த போதுதான் இந்தியா முத்திரைப் பதித்த தருணமாகும். 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று இந்தியா தனது முதலாவது பரிசோதனை செயற்கைக்கோளான ஆரியபட்டாவை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.