முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்

Read Time:7 Minute, 5 Second

பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

ஏ.பி.வாஜ்பாய் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். வாஜ்பாய்க்கு சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை, மார்பு சளி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 6 வாரங்களுக்கு முன்னதாக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. சிகிச்சை பலனளிக்காமல் இன்று வியாழன் மாலை 5.05 மணிக்கு வாஜ்பாயின் உயிர்பிரிந்தது. அவருடைய மரணம் இந்தியாவிற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். வாஜ்பாயின் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு

வாஜ்பாயின் மறைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பா.ஜனதா மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் தேசத்துக்காக வாழ்ந்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் சேவை செய்தவர். மிக சிறந்த தலைமைப் பண்பும், தலைசிறந்த தலைவராகவும் விளங்கி, தேசத்தின் 21-ம் நூற்றாண்டுக்கான பயணத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர். வாஜ்பாயின் இழப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில், ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

அவருடன் பழகிய நாட்களையும், நினைவுகளையும் என்னால் மறக்கவும், எண்ணிக்கையிலும் வைக்க இயலாது. என்னைப் போன்றவர்களுக்கு வாஜ்பாய் மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தவர். வாஜ்பாயின் கூர்மையான அறிவுத்திறனும், செயல்பாடும் என்னை எப்போதும் ஈர்க்கும். எதிர்கால கண்ணோட்டத்துடன் அவர் வகுத்த கொள்கைகள், பல்வேறு துறைகளை முன்னேற்ற அவர் எடுத்த நடவடிக்கைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் சென்று சேர்ந்தது. பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும் சந்தித்து, பா.ஜனதா என்ற கட்சியை படிப்படியாக கட்டமைத்தவர்.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்த வாஜ்பாய் பாஜகவின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்து, நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கியவர். பல்வேறு மாநிலங்களில் வலுவான வேர்பிடித்து பா.ஜனதா வளரவும் காரணமாக அமைந்தார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், பாஜகவின் தொண்டர்களுக்கும், லட்சக்கணக்கான அவரின் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நண்பனை இழந்து தவிக்கிறேன்

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாஜ்பாய் மரணத்தினால் ஏற்பட்டுள்ள வருத்தத்தையும், துயரத்தையும் தெரிவிக்க என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் கிடையாது. என்னுடன் பணியாற்றிய மூத்தவர் என்பதை தவிர்த்து, உண்மையில் எனக்கு 65 ஆண்டுகள் நெருங்கிய நண்பர் ஆவார். ஆர்.எஸ்.எஸ். புரட்சியாளர்களாக இருந்து பா.ஜனதா கட்சியை தொடங்குவது வரையிலும், நெருக்கடிநிலை பிரகடன இருண்ட காலத்தின் போது போராடி ஜனதா கட்சியை உருவாக்கியது, 1980 பா.ஜனதா கட்சியின் தோற்றம் வரையில் அவருடன் பயணித்த நீணட காலத்தை நினைவுகொள்கிறேன்.

மத்தியில் காங்கிரஸ் இல்லாத ஒரு கட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த வரலாறு வாஜ்பாய் தலைமையில் படைக்கப்பட்டது. அவருடன் ஆறு ஆண்டுகளாக துணை பிரதமராக பணியாற்றும் பாக்கியம் எனக்கு இருந்தது. என்னுடைய மூத்தவரான அவர், எப்பொழுதும் ஊக்கப்படுத்தினார், எல்லா விதத்திலும் எனக்கு வழிகாட்டினார். அவரது நாகரீகமான தலைமைத்துவ குணங்கள், மெய்மறக்கசெய்யும் சொற்பொழிவுகள், அதிகமான தேசப்பற்று, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கருணை, பாசம் மற்றும் கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் குறிப்பிடத்தகுந்த குணங்கள் என்னுடைய பொது வாழ்க்கையில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அடல்ஜியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார். நன்கு கல்வி பயின்ற குடும்பத்தில் பிறந்த வாஜ்பாய், எம்.ஏ அரசியல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்று சிறைக்கு சென்றவர். 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டுவரப்பட்ட போது கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை வாஜ்பாய் சிறையில் அடைக்கப்பட்டார்.

1980-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியை தோற்றுவித்த வாஜ்பாய், காங்கிரஸை விமர்சிக்கும் கட்சியாக பா.ஜனதாவை வளர்த்தார். காங்கிரஸ் அல்லாத முதல் ஸ்திரமான அரசையும் கொடுத்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியா வெற்றிகரமாக போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது. அனைத்துக் கட்சியினராலும் மிகவும் மதிக்கப்படக்கூடிய தலைவராக வாஜ்பாய் விளங்கினார்.