மனிதனால் ஏற்பட்ட பேரழிவு…

Read Time:9 Minute, 33 Second

கேரளாவில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, இது இயற்கையினால் ஏற்பட்டது கிடையாது, முழுவதும் மனிதனால் ஏற்பட்டவை என்கிறார் சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில்.

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகள் அனைத்தும் நிறைந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், தெருக்கள் எல்லாம் ஆறுகளாக காட்சியளிக்கிறது. கேரளா முழுவதும் வெள்ளத்தினால் உருகுலைந்து காணப்படுகிறது. உயிரிழப்பு போக பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளது, தொடர்ந்து மழையின் கோரம் நின்றபாடாக தெரியவில்லை. இயற்கையின் பாதையில் தடங்கலை ஏற்படுத்தும் போது அதனுடைய கோரத்தை தாங்க முடியாது என்பதற்கு மற்றொரு சாட்சியாகியுள்ளது என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில் பேசுகையில், கேரளாவில் இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான்… மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க காட்கில் குழு மேற்கொண்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தி இருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை எளிமையாக எதிர்க்கொண்டிருக்கலாம். கேரளாவில் இப்போது எழுந்துள்ள நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. மாநிலத்தில் அதிகனமழை பெய்துள்ளது. ஆனால் பருவமழை காலத்தில் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுதான். இது மழையின் காரணமாக ஏற்படவில்லை. உணர்வில்லாமல் நிலம் பயன்படுத்தப்படுவதே காரணமாகும். இவ்விவகாரத்தில் நாங்கள் ஒரு தெளிவான வழிமுறையை கொடுத்திருந்தோம்.

உள்ளூர் சுயநிர்ணய அமைப்புகளின் ஒப்புதலுடன் இயற்கை வளங்களை பாதுகாக்க பரிந்துரை செய்தோம். ஆனால் எதுவும் உணர்ந்துக்கொள்ளப்படவில்லை.

பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியிருந்தால் பேரழிவை தடுத்திருக்கலாம் என்று சொல்ல முடியாது, ஆனால் பேரழிவின் தாக்கத்தை குறைத்து இருக்கலாம். நிலம் ஆக்கிரமிப்பு அளவுகடந்த எல்லையை தாண்டி அதிகரித்துள்ளது. நிலத்தடிநீரை பாதுகாக்கும் நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகிறது. இப்போது நீர் தடுக்கமுடியாத வகையில் செல்கிறது. நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதற்கு அங்குள்ள குவாரிகளும் காரணாகும். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளும் நிதி நலன்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர், அவர்களும் பேரழிவிற்கு உண்மையில் காரணமாவார்கள். வெறுமனே அரசாங்கத்தை மட்டும் குறைகூற முடியாது. சுய நலன்களை கொண்டவர்களும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் உண்மையை உணரவேண்டும். இதேபோன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் உள்ளடக்கிய இயற்கை பாதுகாப்பு இங்கே நடக்கவில்லை. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாதவ் காட்கில் பரிந்துரை என்ன?

குஜராத்தின் தென்பகுதியில் தப்தி நதிக்கரையில் தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி வரையில் நீளும் 1,29,037 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, யுனெஸ்கோவால் உலகில், உயிரிப்பல்வகைமை (பயோ-டைவர்சிட்டி) கொண்ட பாரம்பரிய மிக்க 34 இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இந்த மலைத்தொடரில்தான் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி மற்றும் பிற சிற்றாறுகளின் பிறப்படிமாக உள்ளது.

மாதவ் காட்கில்

4,000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 120 வகைப் பாலூட்டிகள், ஏராளமான அரிய உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் உள்ளது. பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010-ல் அமைத்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் குழு 2011-ல் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடவில்லை. உயர்நீதிமன்றம் சென்ற பின்னர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறிக்கை வெளியானது. மாதவ் காட்கில் குழு, மேற்குத்தொடர்ச்சி மலைகளை, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும். இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மலை வசிப்பிடங்களை புதியதாக உருவாக்க கூடாது. மலை கிராமங்களில் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்குவதை தவிர்கக வேண்டும். அங்கு விவசாயம் சாராத செயல்பாடுகளுக்காக நிலங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மலைப்பகுதியில் பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

பூச்சிக்கொல்லி அல்லது மரபணு மாற்று பயிர்களுக்கும், மலைப்பகுதிக்கு தொடர்பற்ற குரோட்டன்ஸ் வகை செடிகளுக்கும் தடை விதிப்பது.

யூக்கலிப்டஸ் மரங்களை தடுப்பது. வன உரிமைச் சட்டம்-2006-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கு நில உரிமை வழங்குவது. தற்போது நடைமுறையில் உள்ள வனக்கூட்டு நிர்வாக முறைக்கு பதிலாக, வன உரிமைச்சட்டப்படி வளங்களை நிர்வகிப்பது. முக்கியமாக, சுரங்கப் பணிகளை கண்காணிப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவருவது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலான அணைத் திட்டங்கள், ரெயில் பாதை பணிகள் போன்றவற்றையும் கட்டுக்குள் கொண்டுவருவது போன்ற பரிந்துரைகளை மேற்கொண்டது. இதற்கு எஸ்டேட் உரிமையாளர்கள், நில விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, பின்னர் இதனை கைவிடும் நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்து, மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையை மறுஆய்வு செய்தது. கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரையும் எதிர்ப்பு எழுந்து, பேப்பர் அளவிலே உள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாத்து, அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை இப்போதைய கொள்கை வகுப்பாளர்கள் விரும்புவது கிடையாது. ஜனநாயகமும், அரசியல் சட்டப்படியான அமைப்புகளும், சுற்றுச்சூழலை காக்கப் பலவித சட்டங்களும், மக்கள் விரும்புவது என்ன என்பதை தெரிந்துகொள்ள வசதிகளும் இருந்தும் மக்களுடைய விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டு மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்படுகின்றன. இதில் மேற்குதொடர்ச்சி மலையும் தப்பவில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் நாடி நரம்புகளை அறுத்தும், அதன் அடிவயிற்றை கிழித்தும் வளர்ச்சி என்ற பெயரில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. மலைகளையும், காடுகளையும் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை கேரளா வெள்ளம் உணர்த்துகிறது.