செண்பகவல்லி அணை; 45 ஆண்டுகளாக தமிழகத்திற்கு கேரளா வஞ்சம்!….

Read Time:7 Minute, 25 Second

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணை விவகாரத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கேரளா தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவ முதல்நபராக முன்வந்தவர்கள் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்ததே. கேரளாவின் வஞ்சத்தால் தென்மாவட்டங்கள் 45 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

செண்பகவல்லி அணை

கேரள – தமிழக எல்லையில் சிவகிரி ஜமீன் மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 200 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செண்பகவல்லி அணை 1773-ல் கட்டப்பட்டது. பேபியாறு, பேச்சுக்கோவில் ஆறு, சாக நதி, ஈசன் ஓடை மற்றும் சில ஓடைகள் மூலம் செண்பகவல்லி அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையால் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்றது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்தது.

கேரளா எல்லையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணையிலிருந்து தமிழகத்திற்கு கல்லிமலையாறு வழியாக தண்ணீர் வருகிறது. அதனுடன் தீர்த்தப்பாறையாறு மற்றும் பாலையாறு இணைகிறது, பின்னர் தமிழக பகுதியில் உள்ள தலையணைக்கு தண்ணீர் வருகிறது. செண்பகவல்லி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கன்னியா மதகு கால்வாய் வழியாக வருகிறது. அதற்கு முன்னதாக நீர் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இரண்டு புறமாக பிரிகிறது.

1955-ல் செண்பகவல்லி அணையில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் தலையிட்டால் உடைப்பை கேரள அரசு சரி செய்தது. 1959 முதல் 1962 வரையில் அணையின் பராமரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம். இதுதொடர்பான கல்வெட்டும் அணைப்பகுதியில் உள்ளது.

கேரளாவின் வஞ்சம்

1965-ம் ஆண்டு பெய்த கனமழையினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் வரும் கன்னியா மதகில் உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தப்படாத காரணத்தால் நிலமை மோசமாக தொடங்கியது. 200 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டு தமிழகத்திற்கு வரும் தண்ணீர், கேரளாவை நோக்கி செல்லும் முல்லைப் பெரியாற்றை நோக்கி சென்றது. அணையில் மோசமான உடைப்பு நேரிட்டது 1971-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரும் உடனடியாக தலையிட்டு கேரளாவிடம் பேசினார்.

பராமரிப்பு செலவை தமிழகம் ஏற்க வேண்டும் என்று கேரளா கூறியது. தமிழகம் ஏற்றுக்கொண்டு அதற்கான நிதியை வழங்கியது.
தமிழக அரசு, 5.80 லட்சம் ரூபாய் செலுத்தியது. இதன்பின், திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளதாக கேரள அரசு கூறியது. 1985-ல் தமிழக அரசு மேலும், 5.15 லட்சம் ரூபாய் செலுத்தியது. ஆனாலும், அணையை கேரள அரசு சீரமைக்கவில்லை. இதனையடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

2006-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘அணையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உடைப்பை சரி செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் அனுப்பிய கோரிக்கைக்கும் கேரள அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக தமிழக அரசு அனுப்பிய நிதியை திருப்பி அனுப்பியது.

2003-ம் ஆண்டு கேரள சட்டமன்றம் இயற்றிய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தின்படியும், 2006-ம் ஆண்டு அந்த சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும், செண்பகவல்லி அணையை பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள இயலாது என கூறப்பட்டது. ஆனால் இதனை முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

2011-ல் மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறையே, புனரமைப்பு பணியை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ‘இரு மாநில அரசுகளும், பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என மத்திய அரசு விலகிக்கொண்டது. இன்று வரை உடைப்பை சரிசெய்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்காமல் கேரளா இழுத்தடிக்கிறது. இதற்கிடையே செண்பகவல்லி அணையின் தடுப்புகளை கேரளா உடைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மனமிறங்குமா கேரளா?

செண்பகவல்லி அணையில் பாதிப்பு என்றால் தமிழகத்திற்கு மட்டுமே பாதிப்பாகும். தண்ணீர் அரபிக்கடலில்தான் கலக்கும். இப்போது வெள்ளத்தை தாங்க முடியாத கேரளா வறட்சியின் பிடியும் எப்படியிருக்கும் என்பதை உணரவேண்டும். 45 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டத்தை நிறைவேற்றினால் நெல்லை மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளின் விவசாய நிலங்களை செழிப்பாக்கும். இப்போதாவது கேரள அரசு அணையை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு நன்றி உரைக்கும் கேரள மக்கள் அம்மாநில அரசுக்கு இதுதொடர்பான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். தமிழக அரசும், கேரளாவிடம் உடனடியாக பேசவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இவ்விவகாரத்தில் கேரளாவின் மனம் இறங்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.