வெளிநாட்டு நிதியுதவியை நிராகரிக்கும் மோடி அரசுக்கு கேரளா கேள்வி? என்டிஎம்ஏ ஆவணம் சொல்வது என்ன?

Read Time:9 Minute, 33 Second

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை ஏற்க மறுத்த விவகாரம் மத்திய மாநில அரசுக்கள் இடையிலான மோதல் போக்கிற்கு வித்திடும் என பார்க்கப்படுகிறது.

கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 10-லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பெருமளவு பொருளாதார சேதமும் நேரிட்டுள்ளது. கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.2,200 கோடி நிதியை மத்திய அரசிடம் இருந்து முதல்வர் பினராயி விஜயன் கோரினார். ஆனால், வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 கோடி வழங்கப்படும் எனவும், பிரதமர் மோடி ரூ.500 கோடி வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ரூ. 100 கோடியை அறிவித்தார், இதுபோன்று மாநிலத்திற்கு சென்ற மத்திய உயர்மட்ட குழுவும் ரூ. 60 கோடியை அறிவித்தது. ஆகமொத்தம் மத்திய அரசு தரப்பில் ரூ. 760 கோடி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கேரள மாநிலத்தின் பாதிப்பை உணர்ந்த கத்தார் நாடு ரூ.35 கோடியும், ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடியும் அளித்து உதவுவதாக அறிவித்தன. மத்தியஅரசு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக அறிவித்தது. இந்த நிதியுதவியை மத்திய அரசு ஏற்குமா? என்ற குழப்பம் நீடித்தது. இதற்கு மத்திய அரசு 22 இரவு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிதியுதவியை வாங்குவதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஸ் குமார் அறிக்கையில், “வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதியம் மற்றும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியத்திற்கு வழங்கும் உதவியை வரவேற்கிறோம். ஆனால் ஏற்கனவே உள்ள கொள்கை முடிவுகளின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் உதவியை அரசு ஏற்காது,” என தெரிவிக்கப்பட்டது.

2004 ல் இருந்து இயற்கை பேரழிவுகளின் போது வெளிநாட்டு அரசாங்கங்களின் எந்த உதவியையும் மத்திய அரசு ஏற்கவில்லை என்பது உண்மையானது என்றாலும், இதுபோன்ற சூழ்நிலையில் நம் நாட்டுக்கு உதவும் வகையில் வேறு எந்த நாடுகளாவது நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை அளித்தால், அதனை ஏற்பதில் தவறில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் சொல்வது என்ன?

கடந்த 2016-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) வெளியிட்ட தேசிய பேரிடர் மேலாண்மை திட்ட (என்டிஎம்பி) அறிக்கையில், கொள்கை முடிவாக இந்திய அரசு பேரிடர் காலங்களில் வெளிநாட்டு உதவிக்கு கோரிக்கையை விடுக்காது. பேரிடர் ஏற்படும் நேரத்தில் வெளிநாடுகள் தாமாக முன்வந்து நல்ல எண்ணத்தில் அடிப்படையில் அளிக்கும் உதவிகளை மத்திய அரசு ஒருவேளை பெறும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவியை பெறுவதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி என்பது முக்கியமானது.

இந்திய உள்துறை அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்துடன் ஆலோசனையை மேற்கொண்டு இந்திய உள்துறை அமைச்சகம் மதிப்பீடு செய்கிறது.

வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறுவதை கவுரவப்பிரச்சினையாகக் கருதுகிறதா? என்ற கேள்வியே எழுகிறது.

மத்திய அரசு வகுத்த தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்திலேயே வெளிநாடுகளில் இருந்து உதவிகளை வாங்கலாம் என்று கூறிவிட்டு, தற்போது, வாங்க மறுப்பது எந்தவகையில் நியாயமான செயல் என தெரியவில்லை. இத்தகைய நேரங்களில் வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொள்வதால் இந்தியா பேரிடர்களை எதிர்க்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளது என்பதை பிரதிபலிப்பதாகாவோ, மத்திய அரசின் சொந்த நிதி உதவியின் பற்றாக்குறையை முன்னிலைப்படுத்துவதாவோ அமையலாம் என பார்க்கப்படுகிறது.

இதற்கிடையை அரசியல் தலைமைகளிடம் இருந்து வெளிநாட்டு உதவிகளை பெற வேண்டும் என்ற கோரிக்கையும், கேள்வியும் எழுகிறது.

ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கும் நிதியை மத்திய அரசு மறுப்பதற்கு முன்னதாக கேரள முதல்-அமைச்சர் பினராய் விஜயன் பேசுகையில், “மத்திய அரசு நிதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய அரபு எமிரெட்ஸை பிறநாடுகளை போன்று பார்க்க வேண்டாம் என அந்நாட்டின் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்களுடைய தேசத்தை கட்டமைப்பதில் இந்தியர்கள், குறிப்பாக கேரள மாநிலத்தவர்களின் பங்கு முக்கியமானது” என்றார். பினராய் விஜயனின் கோரிக்கைக்கு பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. இதுதொடர்பாக முன்னாள் காங்கிரஸ் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கும் உதவியை மத்திய அரசு ஏற்காது என்பது தொடர்பான செய்திகள் மிகவும் அதிருப்தி அளிக்கிறது இப்பிரச்சனையை மிக முக்கியமாக கருத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் உம்மன் சாண்டி. மத்திய அரசும் கூடுதல் நிதியை வழங்க முற்பட வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்தார்.

ஐக்கிய அரபு அமீரகம் நாடு தாமாக அளிக்கும் உதவியைப் பெறாமல் மத்திய அரசு தடுப்பது என்பது அரசியல் பழிவாங்கல் மற்றும் . கேரளாவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. கேரள மாநில நிதி அமைச்சர் ஐசக், பினராயி விஜயனும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளைப் பெற அனுமதிக்க வேண்டும் அல்லது, நாங்கள் கேட்கும் உதவிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இப்போது வெளிநாட்டு உதவியை மத்திய அரசு நிராகரித்தது, மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. கேரளாவிற்கு வெள்ளத்தினால் ரூ. 30,000 கோடி வரையில் இழப்பு நேரிட்டு இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு ரூ. 760 கோடியாக உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு வெறும் ரூ. 80 கோடியை மட்டுமே கேரளாவிற்கு வழங்கியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே கேரள முதல்-அமைச்சர் நிவாரண நிதியத்திற்கு உதவிகள் செய்யாதீர்கள் என வலுதுசாரியினர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது கேரள மக்களின் காயத்தில் உப்பை தேய்ப்பது போலாகியுள்ளது. கேரளா மாட்டிறைச்சியை சாப்பிடும் தேசமாக என அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

இதற்கிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பல அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசுகையில் வெளிநாட்டு உதவிகளை பெறுவது அல்லது நிராகரிப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பது பிரதமர் அலுவலகம்தான், வெளியுறவுத்துறை கிடையாது என கூறியுள்ளனர் என தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது. இது கேரள அரசுக்கும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கும் இடையே மோதலை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.