வெள்ளத்திற்கு தமிழகம் காரணம் கேரளா அபாண்டம்!…

Read Time:12 Minute, 3 Second

ஆகஸ்ட் 8-ம் தேதி கனமழை தொடங்கி, 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ளம் நேரிட்ட நிலையில் 15-ம் தேதியே 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதுதான் காரணம் என்று பினராயி விஜயன் அரசு குற்றம் சாட்டியுள்ளதில் வியப்படைய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா தொடர்ச்சியில் இருந்தே விஷத்தைதான் கக்கி வருகிறது.

ஆகஸ்ட் 8-ம் தேதியில் வரலாறு காணாத கனமழை காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. மழையினால் மாநிலத்தின் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு, கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன் கடிதம் எழுதினார். இதனையடுத்து அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என தமிழகம் பதில் கூறியது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி கேரளாவின் ரசூல் ஜாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது கேரளா தாக்கல் செய்த பதிலில் ‘‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திடீரென தண்ணீரை திறந்து விட்டது தான் கேரளாவில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட காரணமாகும். அணையின் கீழ் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபோதுமான அவகாசம் தேவை என்ற கேரளாவின் கோரிக்கையை தமிழகம் ஏற்கவில்லை. எந்த முன்னறிவிப்பும் இன்றி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகமான தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது’’ என தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ‘‘ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் முதல் 19-ம் தேதி வரை இடுக்கி, எடமலையார்

அணைகளில் இருந்து 36.28 தண்ணீர் டிஎம்சி திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம். ஆகஸ்ட் 15-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அன்று கேரள அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி திறந்துவிட்டது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு தமிழகம் காரணம் அல்ல’’ என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க அணையை கண்காணித்த துணைக் குழுவும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்திருந்தது. இதனையடுத்து 24/08/2018 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியிலேயே வைத்திருக்க உத்தரவு பிறப்பித்தது. கேரளாவும், தமிழகமும் மத்திய துணை கமிட்டியின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளா அபாண்டம்

கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி கனமழை தொடங்கி, 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ளம் நேரிட்ட நிலையில் 15-ம் தேதியே 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதுதான் காரணம் என்று பினராயி விஜயன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா ஆரம்பத்தில் இருந்தே விஷத்தைதான் கக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அணைகள் திறப்பு விவகாரத்தில் முறையான எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில் பினராய் விஜயன் அரசு தமிழகத்தின் மீது குற்றச்சாட்டை வைத்து தப்பிக்க முயற்சி செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு மட்டுமே காரணம் என்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் தாக்கல் செய்துள்ளது. அரசின் தவறை அம்மாநில மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதற்கு பினராய் விஜயனின் அரசின் ஒரே ஆயுதம் முல்லைப் பெரியாறு அணையாகும்.

மின்சார உற்பத்தியை மட்டுமே மையமாக கொண்டு செயல்படும் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகஸ்ட் 9-ம் தேதி திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 10-ம் தேதிதான் அணையின் 5 ஷட்டர்களும் திறக்கப்பட்டது. பின்னர் அவ்வபோது நீர் திறப்பு மாற்றி அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15-ம் தேதிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடுக்கி அணை ஜூலை இறுதியிலே முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்தது. அப்போதே 26 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்படும் அணை என செய்திகள் இந்திய மீடியாக்களில் வெளியாகியது. ஆனால் மின்சார தயாரிப்பில் மும்மரமாக இருந்த கேரளா மற்றதை யோசிக்க தவறிவிட்டது.

ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய கனமழையே அணையை திறக்கும் கட்டாயத்திற்கு தள்ளியது. அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் தமிழகம் அதிகமான நீரை திறக்கவில்லை என கேரளா குற்றம் சாட்டுகிறது. ஆனால் கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல், அனைத்து அணைகளையும் நிரம்பும் நிலையில் வைத்துவிட்டு, கடைசியாக திறந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு என குறிப்பிடவில்லை.

பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், மேற்குத்தொடர்ச்சி மலைகளை, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும். இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மலை வசிப்பிடங்களை புதியதாக உருவாக்க கூடாது என எச்சரிக்கையை விடுத்தது. இதனை முற்றிலுமாக கேரளா புறம்தள்ளிவிட்டது. இதனை ஏற்க கேரளா மறுக்கிறது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் என்ற பீதியும் கேரளாவில் கிளப்பட்டது. உடனடியாக கேரளா மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மாணி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். கேரள வெள்ள சேதத்துக்கு மின்சார வாரிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கேரளாவில் உள்ள பெரும்பாலான அணைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் அணை திறப்பு முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் வசம் உள்ளது. மழை பெய்து அணை நிரம்பிய நிலையிலும் குறைந்த அளவு தண்ணீரே திறந்து நீர்மட்டத்தை சீராக வைத்து இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் மழை கொட்டியதால் ஒரே நேரத்தில் அனைத்து அணைகளையும் திறந்து விட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவுக்கு வித்திட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கு மனித தவறுகள்தான் காரணம். எல்லா அணைகளும் தகுந்த முன் எச்சரிக்கையின்றி திறந்து விடப்பட்டதால்தான் பெரும்வெள்ளம் ஏற்பட்டது என குற்றம் சாட்டினார்.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை. செருதோனி அணையும், இடுக்கி அணையின் ஒரு பகுதியும் திறந்து விடப்பட்டதில், மின்சார மந்திரி எம்.எம்.மணிக்கும், நீர்வளத்துறை மந்திரி டி.எம்.தாமஸ் ஐசக்கிற்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. வெள்ளத்தின் நிலைமை கைமீறிப்போய் விட்டபோதிலும், கேரள மின்வாரியம் அதிக நீர்மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் பார்ப்பதற்குத்தான் முயற்சித்தது. வெள்ளம் மிக மோசமாக பாதித்த மாவட்டங்கள் பலவற்றில் தண்ணீர் அளவு பெருகி, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தபோது மக்கள் தூக்கமற்றுப்போனார்கள்.

ஜூலை மாத மத்தியிலேயே அணைகள் 90 சதவீதம் அளவுக்கு நிரம்பிவிட்டன. கேரள மாநில மின்வாரியமும், அரசும் எச்சரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார் ரமேஷ் சென்னிதாலா. இதேபோன்று ஆளும் மார்க்சிஸ்ட் தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., ராஜூ ஆபிரகாம் பேசுகையில் “எந்த ஒரு எச்சரிக்கையும் விடுவதற்கு முன்பே பத்தணாம்திட்டாவில் உள்ள ரான்னியில் வெள்ளம் ஏற்பட்டு விட்டது. காக்கி, பம்பா அணைகளை திறப்பதில் தவறுகள் நேர்ந்து விட்டன” என குற்றம் சாட்டினார்.

வயநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காகரின், “ஆரம்ப கட்டத்தில் மக்கள் முன்கூட்டியே உஷார்படுத்தப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. 2-வது கட்டத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உஷார்படுத்தப்பட்டனர். தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. நிலச்சரிவால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது” என்று கூறினார். வெள்ளத்திற்கு மோசமான அணை நிர்வாகமே காரணம் என நிபுணர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆக்கிரமிப்பு, அணைகளை கையாளுவதில் தோல்வி, மோசமான பேரிடர் எச்சரிக்கை நிர்வாகம் என தன்னுடைய தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள கேரளா, தமிழகத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.