உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து சேலத்து இளைஞர்கள் அசத்தல்!

Read Time:3 Minute, 2 Second

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு (பயோ காஸ்) உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

சேலத்தை சேர்ந்த குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வீட்டில் கிடைக்கும் உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் 1 கிலோ இயற்கை கழிவுகளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை சமையல் செய்ய அடுப்பை எரிய வைக்க முடியும் என அவர்கள் செயல்முறையில் நிரூபித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு செலவு மிச்சமாவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்றும் நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் கண்டுபிடித்துள்ள கலனில் வீட்டில் உற்பத்தியாகும் உணவு கழிவுகளை போட்டால் அதிலிருந்து கேஸ் உருவாகிறது. சேலம் குப்பைக்காரன் குழு எனும் தன்னார்வ தொண்டு அமைப்பாளர்களில் ஒருவரான கெளதம் பேசுகையில், “இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கலனை இப்போது சமையலுக்குப் பயன்படுத்தி வரும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அதனால் நமக்கு காசு மிச்சமாவதுடன் கழிவுகளையும் பயனுள்ள வகையில் பயன்படுத்திய திருப்தியும் கிடைத்த மாதிரி இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

இளைஞர்களின் இந்த புது முயற்சி குறித்து மாநகர் நல அலுவலரான பார்த்திபன் பேசுகையில், இந்த கலனால் இரண்டு பலன்கள் உண்டு. ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. குப்பைகளை குப்பை மேட்டில் வீசுவதால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் அப்படியே காற்றில் கலந்து துர்நாற்றம் அடிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுபடுத்த கூடும். அதை இந்த கலனை உபயோகப் படுத்துவதின் மூலம் தவிர்க்கலாம் என்பது
ஒரு நன்மை. மற்றொரு நன்மை என்னவென்றால் வீட்டுக் கழிவுகளை வீணாக்காமல் அவற்றிலிருந்து கேஸ் தயாரித்து அதை சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது வீட்டின் சிக்கன நடவடிக்கைக்கும் உதவியாக அமையும் என்று கூறியுள்ளார்.

இளைஞர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.