இந்தியா வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.34-க்கு விற்பனை செய்கிறது ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

Read Time:5 Minute, 48 Second

இந்தியா வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 34க்கு விற்பனை செய்கிறது என்பது ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு காரணமாகவும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பட்ஜெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொள்கிறது.

இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டிற்கு என்ன விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கேட்டிருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போதுதான் பதில் அளித்துள்ளது.

பதிலில், 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி முடிய வெளிநாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாகவும் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ரோகித் சப்ரவால் பேசுகையில் “இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.69 முதல் ரூ.75 விலையிலும், டீசல் லிட்டர் ரூ.59 முதல் ரூ.67 வரையிலும் விற்பனையானது. ஆனால், அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவை அமெரிக்கா, ஈராக், இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது” என கூறியுள்ளார்.

இந்தியா டுடே இதுதொடர்பான விளக்கத்தில், இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடாகவும், அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் முன்னணியில் இருந்து வருகிறது என தெரிவித்துள்ளது. உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்ந்த தரத்தில் பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரித்துக் கொடுத்தால், அதற்கு ஏற்றார்போல் விலை கிடைக்கும் என்பதால் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுக்களின் வரிவிதிப்பு காரணமாகவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு நிலவுகிறது எனவும் கூறப்படுகிறது. மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசலை குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது, ஆனால் இந்தியர்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோலை மோடி அரசு விற்பனை செய்கிறது. இப்படிதான் மோடி அரசு இந்திய மக்களுக்கு துரோகம் செய்கிறது, முதுகில் குத்துகிறது. அரசால் விதிக்கப்படும் கொடூரமான வரிகளால் விலை அதிகரித்து உள்ளது. மோடி அரசு ஏற்கனவே அதிகமான வரிவிதிப்பு காரணமாக ரூ. 11 லட்சம் கோடியை பெற்றுள்ளது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சனம் செய்துள்ளார்.