ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள் என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டியவை

Read Time:10 Minute, 17 Second

இரண்டு வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் – பா.ஜனதாவின் மோதல் பொருளாக இருக்கும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் பாராளுமன்றத்திலும், பொதுத்தளத்திலும் பெரும் விவாதப்பொருளாகி வருகிறது. ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையை விளக்கமாக பார்க்கலாம்.

ரபேல் போர் விமானம்

ரபேல் விமானம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இரட்டை எஞ்ஜின்களால் இயக்கும் விமானமாகும். ரபேல் போர் விமானங்கள் உலகளாவில் மிகவும் சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்

இந்திய விமானப்படைக்கு போதுமான நவீனரக விமானங்கள் இல்லாமை, மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்க்ள் சிக்கியமை காரணமாக 2007-ல் 126 எம்எம்ஆர்சிஏ (Medium multi-role combat Aircraft) விமானங்களை வாங்கும் பணிகள் தொடங்கியது. அப்போதைய காங்கிரஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி, விமானங்களை வாங்குவது தொடர்பான இந்திய விமானப்படையின் முன்மொழிவுக்கு அனுமதியை வழங்கினார். இதற்கான டெண்டர் விடப்பட்டது. இதில் ரஷ்யாவின் மிக்-35, சுவீடனின் கிரிபென், பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon , Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon உள்ள நிறுவனங்கள் கலந்துக்கொண்டது.

இதனையடுத்து நடைபெற்ற நீண்டகால நடவடிக்கையை அடுத்து, 2012-ல் குறைந்தபட்ச விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அசல் திட்டத்தின்படி, 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட 18 விமானங்கள் பறக்கும் நிலையில் தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) என்ற அரசு நிறுவனம் மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில் செய்ய வேண்டும் என்பதாகும். விமானத்தின் விலை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதி பேச்சுவார்த்தைகள் 2014-ம் ஆண்டு முற்பகுதி வரையில் தொடர்ந்தது. இறுதியாகவில்லை. விமானத்தின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 126 போர் விமானங்களுக்கன ஒப்பந்த மதிப்பு சுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது (Rs.54,000 கோடி) என காங்கிரஸ் கூட்டணி அரசால் பரிந்துரைக்கப்பட்டது. உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் உட்பட ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடியாகும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மோடி அரசின் ஒப்பந்தம்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்ற போது 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இருதரப்பு அறிவிப்பு வெளியாகியது. இருநாட்டு அரசுக்கள் இடையிலான ஒப்பந்தப்படி இந்தியா 36 விமானங்களை வாங்கும் என்று அறிவிக்கப்பட்டது. டசால்ட் ஏவியேஷனுடன் நடந்துவரும் நடவடிக்கையவிடவும் (தொடர் பேச்சுவார்த்தை) சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர், பாதுகாப்பு அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் மோடி ஒப்பந்தத்தை எப்படி முடித்தார் என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்டது.

ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது

36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா – பிரான்ஸ் இடையே 2016 செப்டம்பர் 23-ம் தேதி கையெழுத்தானது. 2019 செப்டம்பரில் இருந்து விமானங்களை இந்தியாவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட கொள்முதல் முறையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள்

போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடியென இறுதி செய்தது, ஆனால் இப்போது ஒரு விமானத்தின் விலை ரூ. 1,670 கோடியாக உயர்ந்துள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கழட்டிவிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பும் காங்கிரஸ், விலை தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 2008-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையில் போடப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு அரசு தகவல்களை வெளியிட மறுக்கிறது.

2008 பாதுகாப்பு அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி பேசுகையில், ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களே விலை தொடர்பான விவகாரங்களை வெளியிடுவதை தவிர்க்கிறது என்பது முற்றிலும் தவறானது என கூறியுள்ளார். 12 ரபேல் போர் விமானங்களை 108.33 மில்லியனுக்கு (ஒரு விமானத்தின் விலை ரூ. 694.80 கோடி) பிரான்ஸிடம் இருந்து கத்தார் வாங்கியுள்ளது என காங்கிரஸ் கூறுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ரபேல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்சுக்கு Offset Clause அடிப்படையில் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. (Offset Clause: ஒப்பந்தம் மூலம் வரும் வருமானத்தில் 50% டசால்ட் நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்) இதனை விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன்? காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.

36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், போர் விமானங்களை தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பாதுகாப்பு துறை மூலமாகவே போர் விமானங்களை தயாரிக்கும் உரிமம், “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்” நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக எந்தவிதமான நிலமோ அல்லது கட்டிடமோ கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளில் இல்லை எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் ரிலையன்ஸ் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது.

மத்திய அரசின் பதில்

ரபேல் போர் விமானம் விலை தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே பாராளுமன்றத்தில் ஏற்கனவே பதிலளிக்கையில், “36 விமானங்களை வாங்கி 2016 செப்டம்பர் 23-ம் தேதி இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஒரு விமானத்தின் விலை தோராயமாக ரூ. 670 கோடி மதிப்பாகும். அனைத்து விமானங்களும் 2022-ம் ஆண்டுக்குள் வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது. பின்னர் விலை தொடர்பாக அரசு பேச மறுத்துவிட்டது.


பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் விலையை 126 விமாங்களை வாங்குவதற்கான முன்மொழிவுடன் ஒப்பிட முடியாது என கூறும் மத்திய அரசு, காங்கிரஸ் ஆட்சியைவிட சிறப்பான ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது என்று கூறிவருகிறது.

இதற்கிடையே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை தயாரித்த ஆவணம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பரிந்துரையை காட்டிலும் மோடி அரசு ஒரு விமானத்திற்கு ரூ. 59 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என தெரிவித்த செய்திகள் வெளியாகியது. அப்படியென்றால் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது பாராளுமன்றத்தில் விலை விவகாரத்தை வெளிப்படுத்துவதில் அரசை தடுப்பது என்ன? என்ற கேள்வியே எழுகிறது. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸின் குற்றச்சாட்டும், அரசின் மறுப்பும் தொடர்கிறது.