“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என கோஷம் எழுப்பியதற்காக மாணவி கைது

Read Time:8 Minute, 14 Second

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திங்களன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணம் செய்த போது, கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியா (வயது 28) பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி சோபியா விமானத்தில் பயணம் செய்த போது டுவிட்டரில் பதிவு செய்துள்ள தகவலில், “தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் உள்ளேன். உண்மையில் மோடி-பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். பாசிச ஆட்சி ஒழிக என கோஷமிட விரும்புகிறேன். அவர்கள் விமானத்தைவிட்டு வெளியேற்றிவிட முடியுமா?” என பதிவிட்டுள்ளார். விமானம் நிலையம் வந்ததும் தமிழிசை சவுந்தரராஜன், மாணவியிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார் என சொல்லப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாணவி சோபியாவின் டுவிட்டார் பதிவு.

இதையடுத்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறைக்கு அழைத்து செல்லப்பட்டதும் தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சோபியாவின் தந்தை சாமி, புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், விமானத்துக்குள் சக பயணிகளுக்கு முன்னால் அப்படி கோஷம் போடுவதற்கு அப்பெண்ணுக்கு உரிமை இல்லை. அவர் சாதாரண பயணி மாதிரி தோன்றவில்லை. எனது உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலை அங்கு இருந்தது என்றுதான் நினைக்கிறேன். அவர் எழுந்து நின்று கைகளை உயர்த்தி கோஷம் போட்ட விதமானது அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு இருக்கிறதோ என சந்தேகிக்கிறேன். தமிழகத்தில் இப்படிப்பட்ட அமைப்புகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

இதுதொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் “பாசிசம் என்ற வார்த்தையை அப்பாவிகள் யாரும் பயன்படுத்தமாட்டார்கள். அவரிடம் நான் கேள்வியை எழுப்பிய போது, எனக்கு பேச்சுரிமை உள்ளது என்றார். அவர் கோஷம் எழுப்பினார், பாசிசம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், என கூறியுள்ளார். கனடாவில் உள்ள குழுக்களின் ஆதரவும் மாணவிக்கு உள்ளதாக எனக்கு தகவல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தமிழிசை.

மாணவி சோபியா ஸ்டெர்லைட் தொடர்பான கட்டுரைகளை இணையதள செய்தி நிறுவனங்களுக்கு எழுதியுள்ளார்.

கண்டனம்

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவி சோபியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டு வருகிறது.

“ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாணவி சோபியாவை விடுதலை செய்யக்கோரியும், பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை மராட்டிய மாநில போலீஸ் நடத்திய சோதனையின் போது மாவோயிஸ்டு சிந்தனையாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய போலீசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் காவல்துறையின் நடவடிக்கையின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியியது. மேலும், “மாற்றுக்கருத்து என்பது ஜனநாயகத்தில் பிரஷர் குக்கரின் பாதுகாப்பு வால்வைப் போன்றது. மாற்றுக்கருத்தையும் எதிர்ப்புக்குரலையும் அனுமதிக்காவிட்டால் ஜனநாயகம் என்கிற பிரஷர் குக்கர் வெடித்துவிடக்கூடும் ” என்றது. இது மத்திய – மாநில அரசுக்களுக்கான அறிவுரையாகும்.

கோஷம் எழுப்பியதற்கு கைது

இப்போது, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார் என்ற காரணத்திற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவே அவருடைய கோஷத்தை உண்மையாக்குகிறதா? என்ற கேள்வியையே வலுப்பெற செய்கிறது.

ஜனநாயகம் என்பது கருத்து வேறுபாட்டையும் மக்கள் நலனுக்காகப் போராடுவதையும் தடுப்பதாகவோ, உரிமைக்கான குரலுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதாகவோ இருக்க முடியாது. ஜனநாயகம் வன்முறை செயல்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால், அனைவரும் அவரவர் கொள்கை ரீதியான கருத்துகளை முன்வைக்கவோ, அது குறித்து பேசவோ ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. கருத்துகள், கருத்துக்களால் எதிர்கொள்ளப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்குமுறையின் மூலமாகவோ அல்லது வற்புறுத்தல் மூலமாகவோ எதிர்க்கருத்தை முடக்கிவிட நினைப்பது ஜனநாயகப் பண்பாக இருக்காது.