சென்னையில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி; குட்கா ஊழல் முழுவிபரம்:-

Read Time:7 Minute, 55 Second

மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் தடை உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருட்களுக்கு தடைவிதித்தார். இதனையடுத்து தடையை மீறியும் போதைப்பொருட்கள் விற்பனையானது. இதுதொடர்பான புகார்கள் சிபிஐயிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவது உறுதியானது. நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறை என்பதால் புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறைக்கு சிபிஐ அனுப்பியது. 2015 ஆண்டு ஜூனில் மாதவரம் குட்கா கிடங்கில் போலீஸ் சோதனை நடத்தியது. சோதனையில், மூட்டை மூட்டையாக மாவா, குட்கா கைப்பற்றப்பட்டது. பின்னர்மாதவரம் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் முற்றிலும் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உரிய தொகை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குட்கா நிறுவனம் வரிஏய்பு செய்ததாக இரகசிய தகவல் கிடைக்கவும், 2016 ஜுலை 7-ல் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியது. சோதனையின் போது நிறுவனம் ரூ. 250 கோடி அளவில் வரி ஏய்வு செய்தது தெரியவந்தது.

மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ஒரு டைரி சிக்கியது. டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

டைரியில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு யாருக்கு, யார்? எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியது. மொத்தம் ரூ.40 கோடி லஞ்ச பணம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அமைச்சர் விஜயபாஸ்கர்,

2016 ஆகஸ்டில் இதுதொடர்பாக நடவடிக்கையை எடுக்குமாறு வருமான வரித்துறை தமிழக அரசின் அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன்ராவுக்கு கடிதம் எழுதியது. நடவடிக்கை எடுக்க கூடுதல் ஆதாரங்களை கேட்டபோது வருமான வரித்துறை கூடுதல் ஆதாரங்களை அளித்தது. பின்னரும் நடவடிக்கை முடங்கியது. இதனிடையே 2016 டிசம்பர் 5-ல் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடந்தார். இதனையடுத்து விவகாரம் சூடுபிடித்தது.

டிசம்பர் 21-ல் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

சோதனையடுத்து அப்போதைய காவல் ஆணையர் ஜார்ஜ் உள்துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார். ஜார்ஜ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு, குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை 2017 செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்தும் விசாரணை தேங்கியது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. திமுக ஜனவரி 17-ம் தேதி உயர்நீதிமன்றத்தை நாடியது.

விசாரணையின் போது வருமான வரித்துறை, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார் என பதில் தாக்கல் செய்தது. கடந்த 2017 நவம்பர் 17-ல் போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பிய ரகசியக் கடிதம், வி.கே.சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற போது, வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.

டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து சிபிஐ, விசாரணையை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக உணவு மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த சில அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஒரு மாதமாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை செய்தனர். இதையடுத்து சிபிஐ தீர்க்கன்கரையம்பட்டு கிராமத்தில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான கிடங்கில் கடந்த மாதம் 31-ம் தேதி சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு இவ்வழக்கின் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் சிபிஐ அதிகாரிகள், கிடங்குக்கு சீல் வைத்தனர்.

வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனையை நடத்தியுள்ளது.