காவிரியில் வெள்ளம்… தண்ணீர் இல்லாத நீர் தலம்!

Read Time:3 Minute, 34 Second

காவிரியில் வெள்ளம் ஓடும் நிலையில் பஞ்ச பூத தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தண்ணீர் இல்லாத வறட்சி நிலையே காணப்படுகிறது.

திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது திருவானைக்காவல். இங்குள்ள ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாகும். இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.

பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமான இக்கோவிலின் சிறப்பு சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது. இதனால் எப்போதும் கோவில் கருவறையில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட தண்ணீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் செல்லும் போது கருவறை லிங்கம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதனை கண்டு தரிசனம் செய்யவே பக்தர்கள் பரவசத்துடன் வருவார்கள்.

இப்போது காவிரில் வெள்ளம் சென்றாலும் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவிலில் தண்ணீர் இல்லாத வறட்சி நிலையே காணப்படுகிறது.

ஜம்புகேஸ்வரர் கருவறையில் உள்ள ஸ்ரீமத் தீர்த்தம் காசி தீர்த்தமாக கருதப்படுகிறது. இப்போது இங்கும் தண்ணீர் இல்லாத நிலையே உள்ளது. கருவறை தொடங்கி குளங்கள் வரையில் எங்குமே தண்ணீர் இல்லாத வறட்சி நிலையே காணப்படுகிறது.

“காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் செல்கிறது, ஆனால் கோவிலில் குளங்களில் ஒருசொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையே உள்ளது,” என பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


விழாவிற்காக கோவில் குளம் நிறப்பப்பட்ட காட்சி.

கோவிலில் சமீபத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தெப்பத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவில் குளத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நிரப்பட்ட தண்ணீர் விழா முடிந்த 4 மணி நேரங்களிலே வற்றிவிட்டது. “கோவிலுக்கு இயற்கையாகவே தண்ணீர் வரவேண்டிய நீர் வரத்து பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிப்பாதையை தூர்வார வேண்டும்” என்று பக்தர்கள் வலியுறுத்துகிறார்கள்.