காங்கிரசுக்கு ஆதரவு அதிகரிப்பு; பேஸ்புக் கருத்துக்கணிப்பை பாதியில் நிறுத்திய பா.ஜனதா!

Read Time:2 Minute, 49 Second

யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என பா.ஜனதா பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவு அதிகமானதால் கருத்துக்கணிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இவ்வருட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களிலும் அப்போதுதான் தேர்தல் நடக்கிறது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதி தேர்தலாக பார்க்கப்படும் இந்த தேர்தல்களில் வெற்றியை தனதாக்க வேண்டும் என்று காங்கிரஸ், பாரதீய ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் பிரச்சனை, வியாபம் ஊழல், மத்திய அரசின் நடவடிக்கையில் தொழில் பாதிப்பு ஆகியவற்றை முன்வைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.

ஜோதிராதித்ய சிந்தியா

அங்கு நீண்டகாலமாகவே எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தாண்டி 117 தொகுதிகளில் வெற்றி பெறும் என சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மாநில பா.ஜனதா பேஸ்புக் பகுதியில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என கருத்துக்கணிப்பு தேர்தல் நடைபெற்றது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் பெயரும் இடம்பெற்று இருந்தது. காலை கருத்துக்கணிப்பு தொடங்கியதும் சிவராஜ்சிங் சவுகான் அதிகமான ஆதரவை பெற்று முதலிடம் பிடித்தார். பின்னர் நிலை அப்படியே தலைகீழாக மாறியது. ஆதரவு அனைத்தும் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு குவிந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு அதிகமான ஆதரவு கிடைத்த நிலையில், கமாண்ட் பகுதியிலும் அவரை பாராட்டியே தகவல்கள் பதிவு செய்யப்பட்டது. இது கருத்துக்கணிப்பை தொடங்கிய பா.ஜனதாவிற்கு தர்மசங்கடமானது. இதனையடுத்து மதியமே கருத்துக்கணிப்பை பாதியில் நிறுத்திவிட்டது.