நெல்லையை சேர்ந்த 600 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..!

Read Time:5 Minute, 34 Second

கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திற்கு ரூ. 30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் சிலைகள் திருட்டு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 5.7.1982 அன்று மிகப்பெரிய அளவில் சிலைகள் திருட்டுபோன சம்பவம் நடந்தன. நடராஜர் சன்னதியின் இரும்பு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்டது. கோவிலில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய்விட்டதாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

600 வருடங்கள் பழமையான 2½ அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, 2 அடி உயரமுள்ள ஐம்பொன் சிவகாமி அம்மன் சிலை, 1½ அடி உயரமுள்ள ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை, 1 அடி உயரமுள்ள ஐம்பொன் ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகள் திருட்டுபோனதாக தெரிவிக்கப்பட்டது. இந்த 4 ஐம்பொன் சிலைகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை ஆகும்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் துப்புதுலக்க முடியாததால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது.

இதனிடையே இதே கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 2 அடி உயரம் கொண்ட சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலை, கடந்த 1985-இல் நெல்லை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள சுப்பிரமணியர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத் துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக, இந்த சிலை திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணையில் திருட்டுபோன ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலையை கடத்தி சென்ற திருட்டு கும்பல் ஆஸ்திரேலியாவில் அச்சிலையை ரூ. 30 கோடிக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நடராஜர் சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கை கல்லிடைக்குறிச்சி போலீஸ் விசாரணையில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

சிவகாமி அம்மன் சிலை உண்மையானதா?

இதற்கிடையே சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலையை ஆய்வு செய்ததில், அது கடத்தப்பட்ட சிலை கிடையாது என்பது அம்பலமாகியுள்ளது.

இதனால் இக்கோயிலில் தற்போது உள்ள மேலும் 15 ஐம்பொன் சிலைகளும் மாற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிலைகளை ஆஸ்திரேலியாவிற்கு கடத்திய கும்பல் யாரென்பதையும் கண்டுப்பிடித்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கோயிலில் உள்ள சிலைகள் குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

“உண்மையான சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலையை கண்டுபிடிக்க முழு நடவடிக்கையை எடுப்பதாக,” விசாரணையில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரி கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளில் 90 சதவிதம் சோழர் காலத்துடையது. இப்போது முதல் முறையாக பாண்டிய மன்னர் காலத்து சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “கோவிலில் 15 ஐம்பொன் சிலைகள் உள்ளது. பழைய சிலைகளை கடத்திவிட்டு புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா?” என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.