பா.ஜனதா வெளியிட்ட குழப்பமான விளக்கப்படம் ‘ஃபோட்டோஷாப் சர்க்கார்’ என கலாய்ப்பு!

Read Time:3 Minute, 45 Second

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜனதா வெளியிட்ட குழப்பமான விளக்கப்படம் டுவிட்டரில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதனையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உயர்ந்து வருகிறது, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு எங்கள் கைகளில் இல்லை, இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என மத்திய அரசு கூறியது.

இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான விளக்கப்படம் பா.ஜனதாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பெட்ரோலிய விலை உயர்வின் உண்மைகள் என்ற தலைப்பில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீழ்ச்சியை மையமாக கொண்டு விளக்கப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. 2004- 2009 இடைப்பட்ட ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை 75.8 சதவிதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் 2014-18 இடையிலான பா.ஜனா ஆட்சியில் 13 சதவிகிதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜனதா வெளியிட்ட விளக்கப்படம் பெரும் குழப்பத்தை கொண்டிருந்தது. சதவிதம் விளக்கப்படத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை. அதாவது 80.73 ரூபாய், 40.62 ரூபாய்க்கும் குறைவானது என்பது போன்று பின்பம் கொண்டிருந்தது. குழப்பமான விளக்கப்படம் தொடர்பாக டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்தது. ‘ஃபோட்டோஷாப் சர்க்காரின்’ புது விளக்கப்படம், ஒருவேளை ஜியோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டதோ என்றெல்லாம் டுவிட்டர்வாசிகள் கலாய்தனர்.

இவ்விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. மத்திய அரசு வசூலிக்கும் அதிகமான வரியை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. பா.ஜனதாவிற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சா எண்ணெய் விலையை மையப்படுத்தி விளக்கப்படம் ஒன்றை வெளியிட்டது. `கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை உயர்ந்தது ஏன்’ என கேள்வியை எழுப்பியது. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் காங்கிரஸ், பா.ஜனதாவின் தகவலுக்கு அதேபாணியில் விளக்கப்படம் வெளியிட்டுள்ளது.

அதில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினோம். ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 13 சதவிகிதம் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பும் வகையில் அந்த வரைபடம் அமைந்துள்ளது.