ராஜீவ் காந்தி வழக்கு 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் – குடும்பத்தார் மாறுபட்ட கருத்து

Read Time:7 Minute, 47 Second

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி வந்தபோது, தற்கொலைப்படை தீவிரவாதி மூலம் கொல்லப்பட்டார். தீவிரவாதி தானு உள்ளிட்ட 14 பேர் இதில் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், டி.சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலை குறித்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.

ஆகஸ்ட் 10-ம் தேதி 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், “முன்னாள் பிரதமரின் கொலையாளிகளை விடுவிப்பது மிகவும் அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு மன்றங்கள் மற்றும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியற்றவர்கள் நிர்ணயித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டது.

6-ம் தேதி விசாரணை நடைபெற்ற போது 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதனையடுத்து 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்யலாம் என்றே சட்ட நிபுணர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் எதிர்ப்பு

ஆனால் 7 பேரை விடுதலை செய்யும் நகர்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு தனிச்சையானது கிடையாது, இதற்கு பின்னணியில் பா.ஜனதா அரசு உள்ளது. தீவிரவாதிகள் விஷயத்தில் பா.ஜனதா மென்மையான போக்கை கடை பிடிக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருகின்றன. ராஜீவ் மட்டுமின்றி, அப்பாவி மக்களும், போலீசாரும் கொல்லப்பட காரணமானவர்கள். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள்.
இதுவரை அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. பரந்த இதயம் கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா ஆகியோர் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம்.

ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் நாங்கள் எளிமையான ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை, தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?. அவர்களை விடுவிக்க பா.ஜனதா நியமித்த கவர்னருக்கு பா.ஜனதாவின் கூட்டாளியான அ.தி.மு.க. பரிந்துரை செய்துள்ளது. தீவிரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. தீவிரவாதிகள் விஷயத்தில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. இவர்களின் கபட நாடகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்’’ என்றார்.

ராகுல் காந்தியின் கருத்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் புகழ்பெற்ற லண்டன் பொருளாதார பள்ளியில் மாணவர்களுடன் உரையாற்றுகையில், “என்னுடைய தந்தை ராஜீவ்காந்தி கொலை செய்யப்படக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் பிரபாகரன் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்தில் ஒரு நதிக்கரையில் கிடத்தப்பட்டு இருந்தார். எனக்கு மகிழ்ச்சி கிடையாது. அவரை நினைத்து வருத்தப்பட்டேன். பிரபாகரன் இடத்தில் என் தந்தையையும், அவரின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னையும் வைத்து பார்த்தேன்,” என்று கூறினார்.

எங்களுடைய தந்தையை கொலை செய்தவர்களை நாங்கள் மன்னித்துவிட்டோம், அச்சம்பவத்தை மறந்துவிட்டு முன்செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிவருகிறார். மார்ச் மாதம் சிங்கப்பூரில் பேசுகையில், “என் தந்தை கொல்லப்பட்டதை நினைத்து நானும், பிரியங்காவும் பல ஆண்டுகள் மனதுக்குள் வேதனையில் துடித்தோம். ஆனால், இப்போது என் தந்தையை கொலை செய்தவர்களை நானும், பிரியாங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம் (சொல்லும்போது கண்கலங்கினார்)” என்றார்.

கடந்த ஜூலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டைரக்டர் பா.ரஞ்சித் திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது “ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என ராகுல் காந்தி குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் கூறியிருந்தார். முன்பு சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதால்தான் ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்போது 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் ராஜீவ் காந்தியின் குடும்பத்தார் இடையே உள்ள மாறுப்பட்ட கருத்து வெளியாகியுள்ளது.