ஆயுர்வேத மருந்துவர்கள், மருந்துகளை முறைப்படுத்த சுவிட்ஸர்லாந்து திட்டம்

Read Time:4 Minute, 46 Second

ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக் கொண்ட முதல் மேற்கத்திய நாடான சுவிட்ஸர்லாந்தில் மக்களிடையே அதற்கு வரவேற்பு அதிகரிக்கவும், அந்நாட்டு அரசு, மருந்துவர்கள் மற்றும் மருந்துகளை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பாரம்பரிய உணவு முறைகளை மறந்து நவீனம், துரிதம் என்ற பெயரில் உடல் நிலத்திற்கு எமனான உணவுப்பொருட்களை தினசரி உணவாக கொண்டுள்ளோம். விவசாய முறைகளும் மாறி பயன்படுத்தப்படும் உரங்கள், மருந்துக்கள் அனைத்தும் உணவை விஷமாக்குகிறது. மறுபுறம் பாரம்பரியமான மருத்துவ முறையும் செத்துக்கொண்டிருக்கிறது. மருத்து தயாரிப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்து வளர்ந்து வருகிறது.

பாரம்பரியமான மருத்துவ முறைகளை அழித்து வளரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அசுரவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பக்க விளைகள் எதுவுமில்லாத மருத்துவமுறைகளை விடுத்து இதுபோன்ற மருத்துவத்திற்கு அடிமையாகியுள்ளோம்.

கார்ப்பரேட் நிறுவனங்களும் நாங்கள் இயற்கையான முறையே பயன்படுத்துகிறோம் என்று விளம்பரயுக்தியால் பொருட்களை விற்பனை செய்கிறது. வீட்டில் செய்தால் பயன்படுத்தாத நாம் பேக்கிங் செய்து கொடுக்கும் பொருட்களை கூடுதல் விலைக்கொடுத்து வாங்க தயங்குவது கிடையாது. இந்தியாவில் பாரம்பரிய மருத்து பொருட்கள், மருத்துவ முறைகள் மங்கிவந்தாலும் அதனுடைய பயனை உணர்ந்த மேற்கத்திய நாடுகள் அம்முறையை இப்போது கையில் எடுத்துள்ளது.

இவ்வாறு மேற்கத்திய நாடான சுவிட்ஸர்லாந்து முதன் முதலில் மாற்று மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அங்கீகரித்தது. இப்போது மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்க, கல்விமுறை, பாடத்திட்டங்கள் தேவை. தேர்வு முறையும் தேவை என்று உணர்ந்துள்ள சுவீஸ் அரசு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் முறையை மேலும் ஒழுங்குபடுத்த கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி பேசுகையில் “சுவிட்ஸர்லாந்தில் ஆயுர்வேத மருத்துவர்கள், மருந்துக்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே இதனை முறைப்படுத்தி ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது. மருத்துவர்களுக்கு முறைப்படி சட்ட அனுமதி, விற்கக் கூடிய மருந்துகளுக்கான சட்ட அனுமதி ஆகியவற்றை தீர்மானிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது”.

ஆயுர்வேத மருத்துவதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது, ஆனால் நம்பகத்தன்மை, அங்கீகாரம் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுர்வேத மருத்துவத்துக்கான காப்பீட்டு தொகையை அளிக்க மறுத்து வருகின்றனர். இந்த விவகாரங்களை தீர்க்கவே இப்போது முறைப்படுத்துவதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேதத்தை பின்பற்ற தொடங்கிய முதல் நாடான சுவிட்ஸர்லாந்தில் பல இடங்களில் ஆயுர்வேத மருத்துவமனைகளும், கல்வி மையங்களும் இயங்கி வருகின்றன. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் சுவிஸ் நாட்டுக்காரர்கள்தான். எந்த பக்க விளைவும் இல்லாத ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை அவர்கள் உணர்ந்து, அதனை கொண்டாடவும் செய்கிறார்கள். 2009-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்று மருத்துவ முறை, சிகிச்சை, மருந்துகளை அங்கீகரிக்கும் பிரிவை உருவாக்க ஆதரவளித்து வாக்களித்தனர். இதனையடுத்து தங்களது சுகாதார, மருத்துவ ஒழுங்கமைப்புக்குள் ஆயுர்வேதத்தையும் சுவிட்ஸர்லாந்து இணைத்தது.