ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டன் வந்தேன் – விஜய் மல்லையா தகவல்

Read Time:9 Minute, 8 Second

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நிதியமைச்சரை சந்தித்தேன்

வழக்கு தொடர்பான இறுதி வாதம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள நீதிமன்றம் வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். இதுவரையில் வெளிப்படையாக அரசியல் தலைவர்களை இழுக்காத அவர் அருண் ஜெட்லியின் பெயரை பிரயேகப்படுத்தினார்.

விஜய் மல்லையா செய்தியாளரிடம் பேசுகையில், “எப்போதும் கூறுவது போன்று அரசியலின் கால்பந்தாகிவிட்டேன். என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது. ரூ. 15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். பலிகடாவாக உணர்கிறேன். இரு கட்சிகளுக்கும் என்னை பிடிக்கவில்லை. ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது.

இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சரை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை செட்டில்மெண்ட் செய்யப்படும் என தெரிவித்தேன். இதுதான் உண்மை. இப்போது அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. இதனை கோர்ட்டு முடிவு செய்யட்டும்,” என்றார்.

நிதியமைச்சராக இருந்தது யார்?

விஜய் மல்லையாவையை மத்திய அரசு தப்பிக்கவிட்டுவிட்டது என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இப்போது விஜய் மல்லையா ஒருவரை குறிப்பிட்டு பேசியது, அவர் நாட்டை வீட்டு வெளியேறுவதற்கு முன்னதாக யாரும் உதவினார்களா? என்ற கேள்வியை வலுப்பெற செய்துள்ளது.

விஜய் மல்லையா 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லிதான், இப்போதும் அவர்தான் நிதியமைச்சராக உள்ளார்.

காங்கிரஸ் கேள்வி

விஜய் மல்லையா நிதியமைச்சரை சந்தித்தேன் என்று பேட்டியளித்ததும் இவ்விவகாரத்தை காங்கிரஸ் கேள்வியை எழுப்ப தொடங்கிவிட்டது.

விஜய் மல்லையா எப்படி இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்? ஜெட்லியை மல்லையா சந்தித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பேசுகையில் “விஜய் மல்லையா மற்றும் ஜெட்லி சந்திப்பின்போது பேசப்பட்டது என்ன என்பது மக்களுக்கு தெரியவேண்டும்.” அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும். விஜய் மல்லையா மட்டும் கிடையாது நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மற்றும் பிறரும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைதான் காங்கிரஸ் 18 மாதங்களாக வலியுறுத்தி வருகிறது என்றார். பிற எதிர்க்கட்சிகளும் அரசிடம் இருந்து விளக்கம் கோரியுள்ளது.

ஜெட்லி மறுப்பு

விஜய் மல்லையாவிடம் இருந்து இதுபோன்ற பேட்டி வெளியாகியதும் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்தார்.

அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள விளக்கத்தில், வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக விஜய் மல்லையா கூறியது என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அவருடைய கூற்று தவறானது. உண்மையை அவருடைய பேட்டியில் கூறவில்லை. 2014-ம் ஆண்டிலிருந்தே நான் அவருக்கு சந்திக்க எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் கொடுக்கவில்லை. எனவே, என்னை சந்தித்தார் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. விஜய் மல்லையா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் அவைக்கு எப்போதாவது வருவார். அதனை தவறாகப் பயன்படுத்தினார். நான் அவையை விட்டு வெளியே வந்து என் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

அவராகவே என் பின்னால் விறுவிறுவென வந்தார், நடந்து கொண்டிருக்கும் போதே, ‘நான் கடன் தொகையை செட்டில் செய்து விடுகிறேன்’ என்றார். இவர் ஏற்கெனவே இவ்வாறு பலமுறை போலியாக தெரிவித்தது பற்றி எனக்கு தெரிந்திருந்ததால் உரையாடலை தொடர விரும்பவில்லை. அதனை தடுக்க ‘என்னிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை, வங்கிகளுக்கு செட்டில்மெண்ட் ஆஃபரைத் தெரிவிக்கவும்’ என்று கட் செய்தேன். அப்போது அவர் கையில் வைத்திருந்த ஆவணங்களை கூட நான் பார்க்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக தன் தகுதியை அவர் தவறாகப் பயன்படுத்திய இந்த ஒற்றை வரி தருணத்தை தவிர நான் அவர் என்னை சந்திப்பதற்கு அனுமதி அளித்ததேயில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் அதிர்ச்சியளிக்கிறது

அருண் ஜெட்லிக்கு கேள்வி எழுப்பிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இதுவரையில் இவ்விவகாரத்தை நிதியமைச்சர் மூடி மறைத்தது ஏன்? என்று கேள்வியை எழுப்பினார். நிரவ் மோடி இந்தியாவைவிட்டு தப்புவதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்தார். நிதியமைச்சரை விஜய் மல்லையா சந்துத்துள்ளார். சந்திப்பின்போது நடந்தது என்ன என்பதை தேச மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள் என குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் சந்தித்தேன்

ஜெட்லியின் விளக்கத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா பாராளுமன்றத்தில்தான் பேசினேன், அதிகாரப்பூர்வமான சந்திப்பு கிடையாது. யாரும் என்னை காப்பாற்றவில்லை, நான் ஓடவேண்டிய அவசியம் கிடையாது, என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீடியாக்கள் உருவாக்கியதுதான் என்றார். லண்டன் செல்லப்போகிறேன் என அருண் ஜெட்லியிடம் கூறினேன் எனவும் குறிப்பிட்டார்.

பா.ஜனதாவிற்கு பின்னடைவு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு ஆகிய பிரச்சனையில் விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் பா.ஜனதா அரசுக்கு விஜய் மல்லையாவின் விவகாரமும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே மல்லையா போன்றவர்கள் நாட்டைவிட்டு ஓடுவதில் மத்திய அரசு செயலற்று உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக விஜய் மல்லையாவின் பேச்சும் அமைந்துள்ளது. விஜய் மல்லையா இந்தியாவைவிட்டு வெளியேறும் முன்னதாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசினார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில் விஜய் மல்லையாவே இவ்வாறு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் தேதி தீர்ப்பு

மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் இரண்டு மாதங்களில் கையெழுத்திடுவார். தீர்ப்புக்கு எதிராக அமைந்தால் இந்திய அரசு, மல்லையா ஆகிய இரு தரப்பினரும் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.