கேரளாவில் வேகமாக வற்றும் ஆறுகள், கிணறுகள்!

Read Time:5 Minute, 26 Second

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆறுகள் மற்றும் கிணறுகள் வேகமாக வற்றிவருவது பெரும் வறட்சி என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலமே உருகுலைந்தது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து மழை காரணமாக ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் 491 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. ரூ. 40 ஆயிரம் கோடி அளவில் பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது என வல்லுநர்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தில் பெரும் வறட்சியை நோக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான்.

மாநிலத்தில் அதிகமான மழை பெய்தாலும், அங்கு நிலத்தடிநீர் மட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என எச்சரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஆறுகள் மற்றும் கிணறுகள் வேகமாக வற்றிவருவது சூழியல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகியுள்ளது.

வேகமாக வற்றும் ஆறுகள், கிணறுகள்

கேரளாவில் வெள்ளத்தினை அடுத்து ஆறுகள் மற்றும் கிணறுகள் வேகமாக வற்றி வருகிறது. ஆறுகள், கிணறுகள் வேகமாக வற்றுதல் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஆகியவை மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் பெரும் வறட்சியை எதிர்க்கொள்ள வேண்டியதிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். மாநிலத்தில் வெப்பத்தின் அளவும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து உள்ளது. வெள்ளத்தினால் விவசாயிகளின் தோழன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களும் பெருமளவில் அழிந்துவிட்டது.

பல்லுயிர் பெருக்கத்துக்கு பெயர்போன வயநாடு மாவட்டம் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. மண்புழுக்கள் அழிவு, நீர் ஆதாரங்கள் பாதிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு, விரிசல் விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பெரிய ஆறான பெரியாற்றில் நிலை தலைகீழாக மாறியுள்ளது. இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக நீர் அளவு குறைந்துவிட்டது. பம்பை ஆற்றிலும், மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறான பாரதபுழாவிலும் நீர் அளவு குறைந்துவிட்டது. காவிரிக்கான நீர் ஆதாரங்களில் ஒன்றான கபிணியாற்றிலும் நீரின் அளவு குறைந்துவிட்டது. இதேபோன்று மாநிலம் முழுவதும் ஆறுகளில் நீர் அளவு குறைந்துவிட்டது. ஆறுகளை தவிர்த்து கிணறுகளும் வேகமாக வறண்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வுக்குழு

இந்நிலையில் வெள்ளம் ஏற்பட்ட பிறகு இருக்கும் சூழ்நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து, பிரச்னைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

ஆறுகளில் நீர் அளவு குறைவு, நீர்மட்டத்தில் மாற்றம் மற்றும் நிலங்களில் விரிசல் ஆகியவை தொடர்பாக ஆய்வை மேற்கொள்ளும் பணி மத்திய நீர் வள மேலாண்மை குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சாலை மற்றும் பாலங்கள் சேதம் குறித்து ஆய்வு செய்ய தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல்லுயிர் பெருக்கத்தை சீரமைக்கும் பணி ஜவஹர்லால் நேரு டிராபிகல் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம் , கேரள வன ஆய்வு நிலையம் மற்றும் மலபார் தாவரவியல் பூங்கா மற்றும் தாவர அறிவியல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்லுயிரிகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் வாழ்விட மாற்றம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தனித்தனியாகவும் ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.