தமிழகம் – கர்நாடகம் முட்டிக்கொள்ளும் மேகதாது அணை விளக்கம்

Read Time:7 Minute, 58 Second

காவிரி பிரச்சனையை தீர்க்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்டகாலமாக மேற்கொண்ட சட்டப்போராட்டம் காரணமாக வெற்றி கிடைத்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் வகையில் ‘காவிரி மேலாண்மை ஆணையம்’அமைக்கப்பட்டுவிட்டது. இப்பிரச்சனை முடிந்த நிலையில் மற்றொரு பிரச்சனை தலையெடுத்துள்ளது.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணையை கட்டுவோம் என்று கர்நாடகா மீண்டும் அறிவித்துள்ளது.

மேகதாது திட்டம் என்ன?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகப்புரா பகுதியில் மேகதாது அமைந்துள்ளது. இங்கு பெரும் பாறைகளுக்கு மத்தில் அருவிகளாக, காவிரி பரந்து விரிந்து பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் மேகதாதுவில்தான் அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரி ஆற்றுட‌ன் சங்கமிக்கின்றன. இங்கு ஒரு ஆடு தாண்டும் அளவுக்கு அகலமுள்ள குறுகலான இடம்வழியாகத்தான் காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது. மேகதாது என்ற கன்னட சொல்லுக்கு தமிழில் ஆடுதாண்டி என்று பொருள்.

இங்கு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணையைக் கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. மேகதாது அணையின் மூலம் 66 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புனல் மின்சார நிலையம் தொடங்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. அணை தொடர்பான திட்டத்தை 2013-ம் ஆண்டு கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா வெளியிட்டார்.

ஜெயலலிதா எதிர்ப்பு

மேகதாதுவில் புதிய அணை என்றதும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அணைகள் சட்டத்திற்கு புறம்பானது. கர்நாடக அரசின் புதிய திட்டத்தால் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீரின் அளவு பாதிக்கப்படும்; தமிழகத்தின் விவசாயம், பெருமளவு பாதிக்கும். கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் திட்டம், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின், இறுதி உத்தரவுக்கும் முரணானது. கர்நாடக அரசு அணை கட்டும் திட்டங்களை கீழ்பாசன மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. கூட்டாட்சி முறையை கர்நாடகம் மீறுகிறது என்று கூறியிருந்தார். இணைப்பு

2015-ம் ஆண்டு சித்தராமையா அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியது. இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியும் கோரப்பட்டது. ஆனால், இத்திட்டத்துக்கு தமிழக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், கர்நாடகா முயற்சியை தடுக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகம் தொடர்ந்து அணை கட்டப்படும் என கூறிவந்த போது,

“காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும்” என்று சட்டசபையில் கூறினார் ஜெயலலிதா.

மீண்டும் கையில் எடுத்த கர்நாடகம்

கடந்த வருடம் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை திட்டத்திற்கு கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியது. 2017 அக்டோபரில் கர்நாடக அரசு திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியகூறுகள் பற்றி அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கியது. தேர்தல் முடிந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு முதலமைச்சரான குமாரசாமி மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்றார். திங்களன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய குமாரசாமி, திட்டத்தை முன்னெடுக்க உதவுமாறு கோரிக்கையை விடுத்தார்.

மீண்டும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பிவிட்டது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

தமிழகம் எதிர்ப்பு

கர்நாடகாவின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டம் தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை தராத கர்நாடகம், இந்த ஆண்டு அங்கு பெய்த கனமழையின் காரணமாக தண்ணீரை திறந்துவிட்டது. கர்நாடகாவில் அணைகள் அனைத்தும் நிறைந்த பின்னர்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போது, மேகதாது அணை கட்டப்பட்டால், நிச்சயமாக தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகம் தருவதற்கு வாய்ப்பு கிடையாது. அணையை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை தமிழகம் வலியுறுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நடவடிக்கை

கர்நாடகா மேகதாதுவில் புதிய அணையை கட்ட வேண்டும் என்று முயற்சிப்பது இப்போது தொடங்கியது கிடையாது, 80களிலே தொடங்கிவிட்டது. 1981-ல் அப்போதைய கர்நாடக முதலமைச்சர் குண்டுராவ், மேகதாதுவில் புதிதாக ஒரு அணை கட்டப்போகிறேன் என்று அறிவித்தார். இவ்விவகாரம் கவனத்திற்கு வரவும் எம்.ஜி.ஆர். உடனடியாக அனைத்துகட்சி கூட்டத்தைக்கூட்டி, மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றினார். மேலும் சட்டசபையில் பழ.நெடுமாறனை கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவர செய்தார்.

இதனையடுத்து மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்ட ஜனாதிபதி கர்நாடகம் செல்லக்கூடாது என்று ஒரு கடிதமும் எழுதினார். இதை ஏற்று, ஜனாதிபதி கர்நாடகம் செல்லவில்லை. இப்போது வரையில் கர்நாடகம் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது.