சென்னையை தெறிக்கவிட்ட மழை, இன்று இரவு, நாளை காலையிலும் பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Read Time:2 Minute, 18 Second

சென்னையில் இன்று இரவு, நாளை காலையும் மழை பெய்வது உறுதியென தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்தது. இன்று மதியம் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடிர் என மேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றும் உடன் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தது, மின்சார சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரவும், நாளை காலையும் மழை பெய்வது உறுதியென தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வானிலை குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்துவரும் அவர் மழை தெறிக்க விட்டது என குறிப்பிட்டுள்ளார். வெப்பசலனத்தின் போது வடமேற்கு காற்றால் சென்னைக்கு மழை பெய்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. சென்னை மேற்கு அண்ணா நகர் பகுதியில் மழை தெறிக்கவிட்டுள்ளது, கடந்த அரை மணி நேரமாக இடைவிடாத மழை பெய்துள்ளது, இதனால் தரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இது ஒரு மினி வர்தாவாகும். மழை காரணமாக பல மரங்கள் விழுந்துள்ளதாகவும், மரங்களில் அடியே நிற்க வேண்டாம் என்று தன்னுடைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.