அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் கேரளா! விஞ்ஞானிகள் கவலை

Read Time:4 Minute, 38 Second

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக நேரிட்ட வெள்ளத்தினால் ஏராளமான மண்புழுக்கள் உயிரிழந்துள்ளது மற்றொரு பெரும் நெருக்கடியாக எழுந்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆறுகள் மற்றும் கிணறுகள் வேகமாக வற்றிவருவது பெரும் வறட்சி என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் தோழன் என்று அழைக்கப்படும் மண்புழுக்கள் பெருமளவில் அழிவை சந்தித்துள்ளது மற்றொரு பெரும் நெருக்கடியாக எழுந்துள்ளது. மாநிலத்தில் வெள்ளத்தை அடுத்து வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

மண்வளம் என்பது பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள், நன்மை தரும் நுண்ணுயிரிகள், மண்புழுக்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது

வேளாண்மையில் மண் புழு உரம் முக்கியமான இடம் பெறுகிறது. மண் புழுக்கள் கால்நடைகளின் சாணம், இலை, தழை போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும் வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக மண்புழு உரம் கருதப்படுகிறது.

மண்வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இந்த மண்புழுக்கள் கேரளாவில் அழிந்து வருகிறது.

விவசாய நிலங்களில் ஏராளமான மண்புழுக்கள் இறந்து கிடப்பதை பார்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள். வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஏராளமான மண்புழுக்கள் இறந்துள்ளது. இதே போன்று பிற பகுதிகளிலும் மண்புழுக்கள் உயிரிழப்பு தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மண்வளத்தை பாதுகாக்கும் மண் புழுக்களின் உயிரிழப்பு விஞ்ஞானிகள் மற்றும் மாநில அதிகாரிகளையும் கவலைக்குள் உள்ளாக்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வயநாட்டில் வெப்பம் காரணமாக அதிகப்படியான மண்புழுக்கள் இறந்துள்ளன. இப்போது ஆகஸ்ட் மாத மழைக்கு பின்னர் அதிகமான வெப்பம் அங்கு பதிவாகியுள்ளது, கடந்த வியாழன் அன்று 29.4 டிகிரியாக வெப்பநிலை இருந்துள்ளது.

இந்திய மண்புழுக்களால் அதிகப்பட்சமாக 15 முதல் 28 டிகிரி வரையிலான வெப்பநிலையை தாங்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த இயக்குநர் என்.அனில்குமார் கூறியுள்ளார். மண்புழுக்களின் மரணம் விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று தெரிவிக்கிறார். கேரள மாநில மண்வளப்பிரிவு அதிகாரி பி.யூ.தாஸ் கூறுகையில், வெள்ளத்தை அடுத்து மண்வளத்தில் மாற்றம் இருப்பது பொதுவானது. ஒரு டன் மண் ஆனது 5 கிலோ ஆர்கானிக் பொருட்களும், 50 லிட்டர் தண்ணீரை தக்க வைக்கும் திறனும் கொண்டது. வெள்ளத்தினால் மண்ணில் இருந்து ஆர்கானிக் பொருட்கள் சென்றுவிட்டது.

இதனால் தண்ணீரை தேக்கி வைக்கும் திறனும் குறைந்துவிட்டது. வறண்ட மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மண்புழுக்களை வெளியேற்றிவிடும். இடுக்கி மற்றும் வயநாட்டில் மண்புழுக்கள் உயிரிழப்பிற்கு காரணங்கள் வேறுபடுகிறது. வயநாட்டில் இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பு, கடினமான மண் வறட்சி ஆகியவற்றால் மண்புழுக்கள் உயிரிழந்துள்ளது, இடுக்கியில் நிலத்தின் தன்மையில் திடீரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக உயிரிழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.