வலி நிறைந்த கால்கள்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக ஷூ!

Read Time:5 Minute, 37 Second

சிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கம் வென்ற ஹெப்டத்லான் வீராங்கனையான ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக ஷூவை தயாரித்து வழங்க அடிடாஸ் ஒப்புக்கொண்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

ஹெப்டத்லான் போட்டி என்பது நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய ஏழு போட்டிகளை அடக்கியது.

கால்வலியால் அவதிப்பட்ட ஸ்வப்னா

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மனின்  இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் உள்ளன. ரிக்‌ஷா ஓட்டியான அவருடைய தந்தை  மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தார். தாயின் வருமானம் தந்தையை கவனிப்பதிலேயே போனது. அண்ணன் கூலி வேலை செய்து, கொண்டுவரும் பணத்தில்தான் சாப்பாடு, பயிற்சி எல்லாமே. வழக்கத்துக்கு மாறான கால் பாதத்தால் அவருக்குக் காலில் எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும்.

இந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, சொற்ப அளவில் கிடைத்த விளையாட்டு ஊக்கத்தொகையாலேயே இந்த அளவுக்கு உயரம் தொட்டிருக்கிறார். 2017 ஜூலையில் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி ஹெப்டத்லான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் இவர். அந்த வெற்றியின் மூலம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றார். அங்கும் வலியுடன் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார். ஆசிய விளையாட்டு போட்டியில் ஏழ்மை, உடல்வலி என எதுவும் திறமைசாலிகளின் வெற்றிக்கு தடையல்ல என்பதை நிரூபித்து தங்கம் வென்றார் ஸ்வப்னா பர்மன்.

சாதாரணமாக கிடைத்த வெற்றி கிடையாது

ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் தலா 6 விரல்கள் என மொத்தம் 12 விரல்கள் இருப்பதால், 7 போட்டிகளில் விளையாட அதற்கேற்ப உரிய ஷூக்கள் கிடைக்காமல் ஒவ்வொருமுறை தாவி குதிக்கும்  போதும் கடும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அத்துடன் தாடை வலியுடன் அவதிப்பட்டு வந்தார். போட்டிக்கு முந்தைய நாள் கடுமையான பல்வலியால் அவதிப்பட்டார். வலி நிவாரணி மருந்துகள் எடுத்தால் ஊக்க மருந்துப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். போட்டி நாளில் வலி அதிகமாக, தாடையை இறுக்கி பிளாஸ்திரி ஒட்டினார் ஸ்வப்னா.

கால் வலியுடனும் பல் வலியுடனும் விளையாடி ஹெப்டத்லானில் 6,026 புள்ளிகள் பெற்று இந்திய அளவில் புதிய சாதனை படைத்தார்.

ஸ்வப்னா பர்மன் கோரிக்கை

வலியுடனே, மன உறுதியுடன் போராடி நாட்டுக்காக தங்கம் வென்ற ஸ்வப்னா, அடுத்த சில மணி நேரத்தில் தனக்கான பிரத்யேக ஷூக்களைத் தயாரித்து அளிக்க யாராவது முன்வரவேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

பிரத்யேக ஷூ

இந்நிலையில் அவருக்காக பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட ஷூவை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை முன்னெடுத்தது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் நீலம் கபூர் பேசுகையில்,

“ஸ்வப்னாவின் நிலை பற்றி தெரிந்ததும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாக எங்களை நேரடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக நாங்கள் அடிடாஸ் நிறுவனத் திடம் பேசினோம். அவர்கள் பிரத்யேக ஷூ தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டனர்” என்றார்.

இதுகுறித்து ஸ்வப்னாவின் பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் பேசுகையில், அவருக்கு பிரத்யேக ஷூ தயார் செய்வது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் தரப்பில் சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஸ்வப்னா தற்போது காயம் அடைந்துள்ளார். இதுவரை நான் அவரை சந்திக்கவில்லை. விரைவில் ஸ்வப்னாவை சந்தித்த பின்னர் தேவையான விவரங்களை வழங்குவேன்.

ஆசிய போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்வப்னாவுக்கு பிரத்யேக ஷூ ஏற்பாடு செய்து கொடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கேட்டோம். இப்போது போட்டியில் அவர், தங்கப் பதக்கம் வென்றதும் கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஸ்வப்னா பிரபலமாகி உள்ளார். பல்வேறு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொள்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.