விஜய் மல்லையாவிற்கு சொகுசு சிறை?

Read Time:6 Minute, 52 Second

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறையின் வீடியோ, அவருக்காக பிரத்யேகமாக சொகுசு சிறை கட்டப்பட்டதா? என்ற கேள்வியை வலுக்க செய்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் மனுவை  லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்  நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக  விசாரணை நடைபெற்ற போது, விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டு உள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறை சுகாதார வசதியற்றது என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இந்திய சிறைகளில் மிகவும் மோசமான நிலையே இருக்கும், இருண்ட அறைகள், கொசுக்கடி மற்றும் சுகாதாரமற்ற சூழலுடன் இருக்கும் என்று வாதிடப்பட்டது.

மேலும் சிறையில் வசதிகள் செய்து தரப்படும் என இந்தியா அளித்த வாக்குறுதியை நம்ப முடியாது எனவும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சிறையில் விஜய் மல்லையாவை அடைக்க உள்ள அறையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வசதிகளை வீடியோ எடுத்து தாக்கல் செய்யுமாறு இந்தியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விஜய் மல்லையா அடைக்கப்படுகிற மும்பை ஆர்தர் ரோடு சிறையின் 12–ம் எண் கட்டிடத்தில் உள்ள அறைகளில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகின்றன என்பதை 8 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக எடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

இதன்படி விஜய் மல்லையாவுக்கு டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும். சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி செய்து தரப்படுகிறது.

மொத்தத்தில் அவருக்கு சிறையில் அதிநவீன வசதிகள் கிடைக்க உள்ளன. சிறை கட்டிடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இது என்ன மல்லையாவிற்கு மட்டும் இந்த சிறப்பு வசதி என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடந்த 1993-ம் ஆண்டில், குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. நாடு கடத்தப்படும் நபரின் மனித உரிமைகள் மீறப்படாததை உறுதி செய்யும் பொறுப்பு கோர்ட்டுகளுக்கு இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான நாடு கடத்தல் கோரிக்கைகள் இங்கிலாந்து கோர்ட்டுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிறைச் சாலைகளில் போதிய வசதிகள் இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மல்லையா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார்.

சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறையின் வீடியோ, அவருக்காக பிரத்யேகமாக சொகுசு சிறை கட்டப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிறையில் 2010 நவம்பர் முதல் 2017 ஜூலை வரையிலான மத்திய தலைமை தணிக்கைக்குழுவின் (சிஏஜி) அறிக்கையை தி குயிண்ட் செய்தி இணையதளம் பெற்றுள்ளது.  தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் ஆர்.டி.ஐ. ஆர்வலர் விஹார் தூர்வே, அறிக்கையை பெற்றுள்ளார்.  சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறவில்லை, அங்கு போதிய கழிவறை கிடையாது, பாதுகாப்பு வசதி கிடையாது என சிஏஜி அறிக்கை காட்டுகிறது. மத்திய அரசு, லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது போன்று சிறையில் மேற்கத்திய கழிவறை வசதி போன்ற வசதிகளுடன் தனியாக கட்டிடம் உள்ளது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.

புதிய கட்டிடம் கட்டப்பட்டதா?

ஆர்தர் ரோடு சிறை தொடர்பான ஒரு வருடத்திற்கு முந்தைய சிஏஜி அறிக்கை அங்கு போதிய அடிப்படை வசதிகூட இல்லை என தெரிவிக்கும் நிலையில், லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வீடியோ வியப்படைய செய்யும் வகையில் உள்ளது. விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்திவிட வேண்டும் என்பதில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அரசு புதிய கட்டிடத்தை கட்டியதா? என்ற கேள்வியே எழுகிறது.

டெல்லி திகார் சிறையின் தகவல்துறை அதிகாரி சுணில் குப்தா பேசுகையில், குற்றவாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்தால் கழிவறை வசதியுடன் புதிய சிறை அறையை கட்டுவதற்கு விதிமுறைகள் அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் வீடியோவில் 40 இஞ்ச் டிவி மற்றும் மார்டன் படுக்கை அறை இடம்பெற்றுள்ளது.

மும்பை சிறையில் மொத்தம் 804 கைதிகளை அடைக்க முடியும், ஆனால் அங்கு 342 சதவிதம் அதிகமான கைதிகள் இருக்கிறார்கள் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் மொத்தம் 2,749 கைதிகள் உள்ளனர் எனவும் 1,945 கைதிகள் அதிகமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகள் குளிப்பதற்கு 275 அறைகள் தேவைப்படுகிறது, அங்கு இருப்பதோ 8 அறைகள்தான். ஒருவேளை மல்லையாவிற்காக சிறப்பு சிறை கட்டிடம் கட்டப்பட்டு இருந்தல் இதுபோன்ற தப்பி ஓடிய குற்றவாளிகளை இந்தியா கொண்டுவருவதற்கு இதுபோன்ற வசதிகள் செய்யது கொடுக்கப்படும்? என்ற கேள்வியே வலுக்கிறது.