சென்னையை அசத்திய சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்!

Read Time:5 Minute, 41 Second

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. எல்லோருக்கும் அருளும் முதல்வனை ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வழிபடுவது சிறப்பாகும். மஞ்சளோ, மாட்டுச்சாணமோ ஒரு இலையில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார். விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்டவையாக இருக்க வேண்டும். செயற்கை வர்ணப்பூச்சி கொண்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இரசாயன வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளையும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப் பொருளால் செய்யப்பட்ட சிலைகளையும் நீர் நிலைகளில் கரைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்?

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதை முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அதற்கு காரணம் உள்ளது. ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆறுகளில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போகும், இதனால் நீர், நிலத்தில் தங்காமல் கடலை சென்றடைந்து விடும். நிலத்திற்குள் நீர் இறங்காது. களிமண் உள்ள இடத்தில் நீர் நிலத்திற்குள் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் மூன்று நாட்களில் சற்று உலர்ந்துவிடும்.

இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

மாசடையும் நீர்நிலைகள்

இன்று ஆற்று நீர் நிலைகளில் நீர் இல்லாததால் ஏதாவது ஒரு நீர் நிலையில் கரைக்க வேண்டும் என்றாகிவிட்டது. காலத்திற்கேற்ப மாறிவிட்ட கலர் கலரான ரசாயணம் பூசப்பட்ட விநாயகர் நிலைகளை சம்பிரதயாதிற்காக வாங்க ஆரம்பித்து விட்டார்கள். இரசாயன வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதால் குளங்கள், ஏரிகள், ஆறுகள் என அனைத்து நீர்நிலைகளும் மாசுப்படுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட கொண்டாட்டம், மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பலனளிப்பதாக தெரியவில்லை. இன்றளவும் இதுபோன்ற சிலைகள் பயன்பாட்டிற்கு வருகிறது என்பது வேதனைக்குரியது.

வாழைப் பூக்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை.

சுற்றுசூழலுக்கு உகந்த சிலைகள்

இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 13–ந் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தன. பண்டிகை காலத்தின்போது பசுமையை போற்றும் வகையில் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்கறி, பழம், தேங்காய், தர்பூசணி, மக்காச்சோளம், தானியக் கதிர்கள், கரும்பு, வாழைப் பூக்களை என இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள், சென்னையில் அமைக்கப்பட்டிருந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தர்பூசணி, தேங்காய்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்.

இதேபோன்று மும்பை, புனே, கோவா உள்ளிட்ட வடமாநில பகுதிகளிலும் இயற்கைக்கு உகந்த விநாயகர் சிலைகள் கவனம் பெற்றது. அலங்காரத்திற்காக இரசாயன வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்து நீர்நிலைகளை மாசடைய செய்வதைகாட்டிலும், இயற்கையான சிலைகள் மிகவும் உகந்தது.