மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 1,000 விவசாயிகள் மனு தாக்கல்!

Read Time:4 Minute, 18 Second

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 1000 விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மராட்டியம் மற்றும் குஜராத்தில் கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டத்துக்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஜப்பான் உதவியுடன் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ள புல்லட் ரயில் 2022-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய அதிவேக ரெயில்வே துறை சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இருப்பினும் கிராமங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு சப்போட்டா, மாம்பழம் விளையவைக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மராட்டியம் மற்றும் குஜராத்தில் நிலத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் திட்டத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி முன்னெடுப்பது சவாலானது என்றே தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புல்லட் ரெயில் பாதை செல்லும் வழியில் உள்ள விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த திட்டத்துக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ‘‘2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விவசாய நிலம் எடுப்புச் சட்டத்தை முறைகேடாக மாற்றி, குஜராத் அரசு மோசடி செய்கிறது. விவசாயிகளிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படாமலேயே ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. எனவே இந்த திட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என்று அவர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான சமூக தாக்க மதிப்பீட்டை அரசாங்கம் விவாதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.

‘‘பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 1,000 விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோருவோம்’’ என்று கூறியுள்ளார் விவசாயிகள் தரப்பு வக்கீல் ஆனந்த் யாக்னிக்.