மதுரையில் நடிகர் விவேக் முயற்சியால் 150 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் துளிர்விட்டது!

Read Time:3 Minute, 16 Second

ட்டுப்போன 150 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் நடிகர் விவேக் முயற்சியால் துளிர்விட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் 150 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் திடீரென்று பட்டு போய்விட்டது. இதனால் கவலையுற்ற கிராம மக்கள் தகவலை நடிகர் விவேக்கின் சகோதரி டாக்டர் விஜயலட்சுமி மூலம் அவருடைய கவனத்துக்கு கொண்டு சென்றனர். பட்ட மரத்தின் படத்தையும் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மரத்தை உயிர்ப்பிக்க செய்ய என்ன செய்வது? என டுவிட்டரில் உதவியை கோரினார் விவேக். அவரை டுவிட்டரில் பின் தொடரும் விவசாயி லால் பகதூர் இந்த பதிவை படித்துவிட்டு, உதவ முன்வந்துள்ளார்.

விவசாயி லால் பகதூர், தன்னுடைய நண்பர்களுடன் பாப்பாபட்டி புறப்பட்டார். அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் மரம் மீண்டும் துளிர்விட நடவடிக்கையை எடுத்துள்ளனர். 3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், 3 வாரம் கழித்தும் மரம் துளிர்விடவில்லை. இப்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது. பட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பழமையான மரத்திற்கு உயிர்கொடுக்க முயற்சி செய்த நடிகர் விவேக், அவரது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சேலம் – சென்னை இடையேயான 8 வழி பசுமை சாலைக்காக பசுமை மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் மரம் வெட்டுவது தொடர்பான செய்திகள் வெளியாகிதான் வருகிறது. இந்நிலையில் பட்ட மரம் துளிர்விட்ட செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிபர் மறைந்த அப்துல் கலாம் அறிவுரையின்பேரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.