தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்த சூர்யா!

Read Time:4 Minute, 17 Second

சை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றி வைத்துள்ளார்.

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவன் தினேஷ்குமாருக்கு 10 வயதில் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஒருகட்டத்தில் தசைகள் எல்லாம் சிதைந்து போன நிலையில் சக்கர நாற்காலியிலேயே வாழ்நாளை கழித்து வருகிறார். இருப்பினும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியுடன் இருக்கும் தினேஷ் ஓவியங்களை வரைய தொடங்கினார். கண்களில் காணும் காட்சிகளுக்கு தன்னுடைய ஓவியம் மூலம் உயிர் கொடுத்து வருகிறார்.

சிறுவன் தினேஷோடு கார்த்தி, சிவக்குமார் மற்றும் சூர்யா.

அவருடைய ஒவியங்கள் பல கண்காட்சியில் காட்சிக்கு வைக்கபட்டு, பரிசையும் பெற்று வருகிறது. கடவுளின் படங்கள், ராமயன கதைகள், இயற்கை ஒவியங்கள், மனித உருவங்கள் எனப் பலவகை ஒவியங்களை வரைந்து வருகிறார் தினேஷ். தினேஷ் தொடர்பான செய்தியை புதிய தலைமுறை சமீபத்தில் வெளியிட்டது. அப்போது சிரித்துக்கொண்டு சூர்யா அண்ணாவை பார்க்க வேண்டும், அவரிடம் பேச வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் தினேஷ். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியது. உங்களுடைய ஆசை நிச்சயம் நிறைவேறும் என்ற சூர்யாவின் ரசிகர்கள் பதில் டுவிட் செய்தார்கள். அதன்படி சிறுவனின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றியுள்ளார்.

சூர்யா நடிப்பை தவிர அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவிகளுக்கு கல்வி கிடைக்க வழி செய்து வருகிறார். மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறார், பிறரும் செய்வதற்கு ஊக்கப்படுத்தி வருகிறார். சூர்யா, அவரது சகோதரர் கார்த்திக் சிறுவன் தினேஷ்குமாரை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதற்கு ஏற்பாடு செய்த அவர்கள், தினேஷை குடும்பத்துடன் தனது வீட்டிற்கு சூர்யா அழைத்தார். கார் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தார். இன்று காலை தனது வீட்டில் தினேஷை சூர்யா தன்னுடைய குடும்பத்தாருடன் வரவேற்றார். சிவக்குமார், கார்த்திக், சூர்யா ஆகியோர் வரவேற்று தினேஷூடன் கொஞ்சி மகிழ்ந்தனர்.


தினேஷின் பெற்றோரிடம் பேசிய சூர்யா, நோய் பாதிப்பு குறித்தும், அதற்கான சிகிச்சைகளை குறித்தும் கேட்டறிந்தார். தினேஷிடம் பேசிய சூர்யா, அவருக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும் விதமாக பேசினார். “அடிமனதில் என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடந்துவிடும். பார், இப்போது நீ நினைத்தது நடந்துவிட்டது. அடுத்தும் இதே போல உண்மையாக நினைத்து கொள். அது கண்டிப்பாக நடக்கும்,” என்று சூர்யா பேசியுள்ளார். தினேஷூடன் அவர்கள் அனைவரும் செல்பி எடுத்து கொண்டனர்.

நடிகர் சிவக்குமார் தான் வரைந்த ஒவியம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

தினேஷூக்கு நடிகர் சிவக்குமார் தான் வரைந்த ஒவியம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தினேஷூக்கு பரிசு பொருட்களை வழங்கிய சூர்யா, மருத்துவ செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். சூர்யாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.