விஜய் மல்லையா லண்டன் தப்பி ஓட்டம், சிபிஐ செய்த திருத்தம் என்ன?

Read Time:4 Minute, 54 Second

விஜய் மல்லையாவை தடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என காவல்துறையிடம் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைகளை தவிர்ப்பதற்காக விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவருவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இதற்கிடையே, விஜய் மல்லையா தப்புவதற்கு முன்னரே நடவடிக்கையை மேற்கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி வலுத்துள்ளது.

மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பாக அவருக்கு எதிராக சில ‘லுக் அவுட்’ சுற்றறிக்கையை சிபிஐ விடுத்தது. அதில், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு தப்பி செல்வதற்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. “விஜய் மல்லையாவை தடுத்து நிறுத்திப் பிடித்து வைக்கவோ அல்லது கைது செய்யவோ தேவையான போதுமான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் மல்லையாவுக்கு எதிரான தேடுதல் அறிவிப்பில் மாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

‘லுக் அவுட்’ சுற்றறிக்கை திருத்தம் விவகாரம் வெளியாகிய சர்ச்சையாகிய நிலையில்; மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து “விஜய் மல்லையா தவறிழைத்தவர் என்று எஸ்பிஐ 2014 ஆகஸ்ட் 19-ம் தேதியே நோட்டீஸ் விடுத்தது. 2014 செப்டம்பரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் இதேபோன்ற அறிக்கையை தெரிவித்தது. 2015-ல் எஸ்எப்ஐஒ மற்றும் சிபிஐ அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இப்போது எப்படி சிபிஐ எங்களிடம் ஆதாரங்கள் இருந்ததில்லை என்று கூறமுடியும்?” என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியது.

சிபிஐயை செய்த திருத்தம் என்ன?

இந்நிலையில் மல்லையாவை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என எழுத்துபூர்வமாக சிபிஐ தெரிவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டும் என்பதை மாற்றி, அவர் நாட்டை விட்டு வெளியேறும் போதும், வரும் போதும் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளது.

2015 அக்டோபர் 16 தேதியிட்ட முதலாவது ‘லுக் அவுட்’ சுற்றறிக்கையில் “நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்” என்பதை தேர்வு செய்துள்ளது.

பின்னர் வெளியான 2015 நவம்பர் 24 தேதியிட்ட 2-வது ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை தீவிரம் குறைக்கப்பட்டுள்ளது. முதலாவது சுற்றறிக்கையில் தவறு நேரிட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. மும்பை காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு தனியாக ஒரு கடிதம் வைத்து 2-வது ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. அதில் விஜய் மல்லையா “இந்தியாவுக்குள் வரும்போதும், போகும்போதும் தெரிவிக்க வேண்டும்” என்ற கட்டத்தில் டிக் அடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 மாதங்கள் கழித்து விஜய் மல்லையா, 2016 மார்ச் 2- இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு தப்பிவிட்டார். இப்போது அவரை இங்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பிப்ரவரி 28 மல்லையாவுக்குக் கடன் கொடுத்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு, வெளியேறுவதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செல்ல சட்ட ஆலோசனை தரப்பட்டது. அதன் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.