ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுதான் அம்பானியை சேர்த்தது – பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டே!

Read Time:7 Minute, 30 Second

பேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்தது மோடி அரசுதான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே கூறியுள்ளார்.

பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) ஒப்பந்தத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது. விமானங்களை தயாரிக்கும் உரிமம் “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்” நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை மூலமாகவே சென்றுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள் என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டியவை

இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டிடம் திறன் கிடையாது, காங்கிரஸ்தான் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் மீது குற்றச்சாட்டு

சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு பேட்டியளித்து பேசிய போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 126 விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2012–ம் ஆண்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. டசால்ட் ஏவியேசன் பறக்கும் நிலையில் 18 விமானங்களை சப்ளை செய்ய வேண்டும், மீதி விமானங்கள் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து தயாரிக்க வேண்டும் என்பதாகும்.

இதுதொடர்பாக டசால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று உணர்ந்தது. இந்தியாவில் தயாரித்தால் ஒப்பந்தம் செய்வதைவிட கூடுதல் செலவாகும் என்று நினைத்தது. இந்தியாவில் தயாரிக்கும் விமானங்களின் தரம் குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் உத்தரவாதம் வழங்க முன்வரவில்லை. இதனால், டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடரவில்லை.

2013-ல் செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு விமானம் வாங்குவது தொடர்பான பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது, அப்போது பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணியின் தலையீட்டால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமலே போய்விட்டது. அவர் நினைத்திருந்தால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, அதை பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

முன்னாள் தலைவர் மறுப்பு

இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் தொடர்ந்த நிலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ மறுப்பு தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நான்காம் தலைமுறை போர் விமானமான சுகோய்–30 ரக போர் விமானங்களையே தயாரித்து உள்ளது, ரபேல் விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது என்றார் ராஜூ. பொய் கூறிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றது காங்கிரஸ். இதனையடுத்து ராஜு கூறியதை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்தது.

ஹாலாண்டே பேட்டி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்தது தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில பூதகரமாக மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தீனிப்போடும் வகையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்ததே இந்திய அரசுதான் (மோடி அரசுதான் ஒப்பந்தம் செய்தது) என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டே கூறியுள்ளார்.

பிரான்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள ஹாலாண்டே, ரிலையன்ஸ் விவகாரத்தில் பிரான்ஸ் எந்தஒரு முடிவையும் எடுக்கவில்லை. நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான், அம்பானி குரூப்புடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்களுக்கு எந்தஒரு சாய்சும் கிடையாது, எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டோம். இந்திய அரசின் பரிந்துரையை நான் அதிபராக இருந்த போது ஒப்புக்கொண்டோம் என கூறியுள்ளார்.

மோடி அரசுக்கு நெருக்கடி

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்தான் தேர்வு செய்தது, இதில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று ஹாலாண்டேவின் பதில் அமைந்துள்ளது. எனவே, இவ்விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் இவ்விவகாரத்தில் ஏற்கனவே மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்ப தொடங்கிவிட்டது. ஹாலாண்டேவின் பேட்டி மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்றே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கமர்ஷியல் ரீதியிலான முடிவில் இந்திய அரசோ, பிரான்ஸ் அரசோ முடிவு செய்வதற்கு எதுவும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.