ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியீடு; நடிக்கப்போவது வரலட்சுமியா, நித்யா மேனனா?

Read Time:3 Minute, 1 Second

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆ.பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

“ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பிரியதர்ஷினி கூட்டணி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

முன்னதாக அவர் வெளியிட்ட டுவிட் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் ஜெயலலிதாவாக நடிக்கப்போகிறார் என்ற யூகத்தை எற்படுத்தியது. அவருடைய டுவிட்டரில் தவறுதலாக வரலட்சுமியையும் டேக் செய்திருந்தார், பின்னர் அந்த டுவிட் நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே வரலட்சுமியின் டுவிட் செய்தியும் குழப்பத்தை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்தது.

“அனைவருக்கும் வாழ்த்துக்கள்… ஆ.பிரியதர்ஷினி உடன் தி அயர்ன் லேடி தொடர்பாக எதுவும் இறுதி செய்யப்படவில்லை. எப்போது இறுதி செய்யப்படுகிறதோ, அப்போது நானே முதல் ஆளாக தெரிவிப்பேன். நன்றி.” என குறிப்பிட்டார் வரலட்சுமி.

இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை.

விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே படத்தில் நித்யா மேனனை நடிக்க செய்ய ஆ.பிரியதர்ஷினி முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

படத்தில் ஜெயலலிதாவாக யார் நடிக்கப்போகிறார்கள் என்பதை தொடக்க விழாவில் அறிவிப்போம் என பிரியதர்ஷினி தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.