ஐஸ்வர்யம் அருளும் பார்த்தசாரதி தரிசனம்…

Read Time:10 Minute, 6 Second

தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமான புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புனிதமான இந்த மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டு பெருமாளை தரிசனம் செய்கையில் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் சூரியனை கண்ட பனி போல் விலகி செல்லும். புரட்டாசி என்றாலே பெருமாள் கோவில்கள்தான் நினைவுக்கு வரும். பெரும் நகரமான சென்னையின் மையத்தில் திருவல்லிக்கேணியில் பெருமாள் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். 

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.

மூலவர் : வேங்கடகிருஷ்ணன்

தாயார் : ருக்மிணி

உற்சவர் : பார்த்தசாரதி

தல விருட்சம் : மகிழம்

தீர்த்தம் : கைவிரணி புஷ்கரணி

தொன்மை : சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது

காரணப் பெயர் : பிருந்தாரண்ய ஷேத்திரம்

61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோவில் பஞ்ச மூர்த்தித்தலமாகும். இங்கு வேங்கட கிருஷ்ணர், யோக நரசிம்மர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர் என்று ஐந்து சன்னிதிகளும் பிரதானமாக இருக்கின்றன. ஐந்து திவ்ய தேசங்களில் (திருப்பதி, அகோபிலம், ஸ்ரீரங்கம், அயோத்தி, காஞ்சீபுரம்) உள்ள பெருமாளை ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம். பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அவருக்கு மகளாகப் பிறந்ததாகச் கூறப்படும் வேதவல்லி தாயார் இங்கு தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். கோவில் பிரகாரத்தில் திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் இருக்கின்றன. வெங்கட கிருஷ்ணர் மற்றும் யோக நரசிம்மர் சன்னதியில் தனித்தனியாக கொடி மரம் உள்ளது.

கிழக்கு நோக்கியிருக்கும் பார்த்தசாரதி கோவிலில் ஐந்து நிலைகொண்ட ராஜகோபுரம், ஏழு கலசங்களுடன் கம்பீரமாகத் திகழ்கிறது. அருகில். தல விருட்சம் மகிழ மரம் உள்ளது. ராஜகோபுரம் பெருமாளின் அவதாரங்களை, ராமாயணத்தை பிரதிபலிக்கிறது. கோவில் உள்ளே நுழைந்ததும் கல் தீபதூண், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் வேயப்பட்ட பலிபீடமும், துவஜஸ்தம்பமும் வரவேற்கின்றன. மூலவரை வணங்கிய வகையில் பெரிய திருவடியான கருடாழ்வார் நிற்கிறார். எதிரே கோவிலுக்குள் செல்லும் வழியில் விநாயகரை தரிசனம் செய்யலாம். இன்று கோவிலில் உள்ள வேங்கட கிருஷ்ணரை பற்றி பார்க்கலாம். 

தல வரலாறு

தொண்டை மண்டலம் நாட்டை ஆண்ட மன்னன் சுமதிக்கு திருப்பதியிலுள்ள “திருவேங்கடமுடையான்” மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான். மன்னனுக்கு மகாபாரத போரில் பார்த்தனுக்கு சாரதியாக (அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. தன்னுடைய ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான். அவனுடைய பக்தியில் மனமிறங்கிய திருப்பதி “ஏழுமலையான் வெங்கடேசர்” கனவில் தோன்றி பிருந்தாரண்யம் சென்றால் (திருவல்லிக்கேணி) என்ற துளசிக்காடு (பிருந்தா – துளசி, ஆரண்யம் – காடு) விருப்பம் நிறைவேறும் என்றார். அதன்படியே காட்சியளித்தார். 

திருமலையில் உள்ள ஏழுமலையானே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப் போன்று உணர்ந்த சுமதி மன்னன் “வேங்கட கிருஷ்ணன்” என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். இன்று வரை இத்திருக்கோவில் மூலவருக்கு “வேங்கட கிருஷ்ணன்” என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது. கோவில் முதலில் 8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமானை வழிபட்டு உள்ளனர்.

பார்த்த சாரதி

கோவிலில் மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன் என்றாலும் உற்சவர் பார்த்தசாரதியின் பெயரிலேயே கோவில் அழைக்கப்படுகிறது. பார்த்தசாரதியின் முகத்தில் வடுக்கள் காணப்படும். மகாபாரத போரில் பார்த்தனுக்கு சாரதியாக தேர் ஓட்டியபோது அர்ஜுனனைக் காக்க, பீஷ்மர் ஏவிய கணைகளை தன் முகத்தில் தாங்கி, உதிர்த்ததால் ஏற்பட்ட வடுக்கள். இந்த வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பெருமாளுக்கான நிவேதனத்தில் பெருமளவு நெய் சேர்க்கப்படுகிறதாக ஐதிகம். 

பெருமாள் சிறப்புக்கள்

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண்மீசைக்காரராக காணப்படுகிறார். மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டியது மட்டுமல்லாமல் பாஞ்ச சன்னியம் என்ற தனது சங்கை எடுத்து ஊதி போரை தொடக்கிவைத்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் பெரிய மீசை வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறாராம் பார்த்தசாரதி. இப்படி மீசையுடன் காட்சியளிக்கும் பார்த்தசாரதியை வேறு எங்கும் பார்க்க முடியாது. திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தை சுட்டிக்காட்ட, கம்பீரனாய் பெரும் விழிகளோடு, வெண்மீசையோடு, இடுப்பில் கத்தியோடு, சலக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார்.

அவருடைய விழிகளை மட்டும் உற்றுப் பார்த்தால் நரசிம்ம பார்வை நினைவுக்கு வரும். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கு இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மனித வடிவில் கிருஷ்ணனாக பிறந்ததால் இரண்டு கைகள் மட்டுமே அவருக்கு உண்டு. அதுபோலவே பிற திருத்தலங்களில் இல்லாத வகையில் பெருமாள், குடும்ப சமேதராக இங்கு காட்சி அளிக்கிறார். வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே தாயார் ருக்மணி தேவி புன்சிரிப்போடு, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். 

வேங்கட கிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் பார்த்தசாரதி பெருமாளை பாடிப் பரவியுள்ளனர். வேங்கடகிருஷ்ணனை குடும்ப சமேதராக தரிசிக்கும் போது மனசுக்குள் தெளிவு ஏற்படும். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர். பக்தர்களின் துன்பங்களை யெல்லாம் விரட்டி, அமைதியை உருவாக்குகிறார். பார்த்தசாரதி கோயிலில் பிரதான உற்சவங்களாக சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. 12 மாதங்களும் விழா நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து 5 நாட்கள் மட்டும் பெருமாளை மீசையில்லாமல் தரிசனம் செய்யலாம். 

சர்க்கரைப் பொங்கல்

இக்கோயிலில் சர்க்கரைப் பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதம். 2 கிலோ அரிசியில் சக்கரைப் பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 

கிராம் முந்திரிப் பருப்பும் 700 கிராம் நெய்யும் சேர்க்கப்படுகின்றன. பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணெய், மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது.

செல்லும் வழி:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்ணா சதுக்கத்திற்கு பஸ்கள் உள்ளது. 
 
திறந்திருக்கும் நேரம்:
  
கோயில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. புரட்டாசி சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம் திறந்து இருக்கும். 

இனி வரும் நாட்களில் கோவிலில் உள்ள பிற 4 பெருமாள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஸ்ரீ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.