இந்தியா வாங்கும் பிரமிக்கவைக்கும் ரஷியாவின் எஸ்-400 இடைமறிப்பு ஏவுகணை!

Read Time:6 Minute, 3 Second

இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்கும் பிரமிக்கவைக்கும் எஸ்-400 ட்ரையூம் இடைமறிப்பு ஏவுகணை பற்றி விளக்கமாக தெரிந்துக்கொள்வோம்.

எல்லையில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழும் சீனா ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கிவிட்டது. சீனா எத்தனை ஏவுகணையை வாங்கியது என்பது தெரியவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.40,000 கோடி மதிப்பில் ஐந்து ஏவுகணைகளை வாங்க இந்திய தரப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவை சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுவப்படும்.

எஸ்-400 ட்ரையூம் இடைமறிப்பு ஏவுகணை என்ன?

ரஷியாவின் எஸ்-400 ட்ரையூம் இடைமறிப்பு ஏவுகணை உலகின் மிகவும் மேம்பட்ட அதிநவீன வான் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாகும், சிலநூறு கிலோ மீட்டர்கள் தொலைவுக்குள் வரும் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை எளிதாக கண்டறிந்து, அவைகள் மீது துல்லியமாக தாக்குதலை நடத்தி அழித்துவிடும். ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகள் இடையிலான மோதல் போக்கிற்கு மத்தியில் இவை களமிறங்கியுள்ளது. எஸ்-400 ட்ரையூம் சிஸ்டம் ரேடார் கட்டமைப்பு, கட்டுப்பாட்டு முறைகள், பல்வேறு வகையான ஏவுகணைகளை கொண்டுள்ளது.

1000 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள நுழையும் விமானங்கள் உள்பட அனைத்து பொருட்களின் நகர்வை எளிதாக கண்டறிந்துவிடும். எஸ்-400 ஏவுகணை ஏவுகணை நிலை நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து சுற்றிலும் தாக்குலை முன்னெடுக்கும். ஒரே நேரத்தில் டஜன் கணக்கில் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளே நுழைந்தாலும், ஏவுகணைகளை துல்லியமாக ஏவி வெற்றியை தனதாக்கும்.

சிஸ்டத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தாக்குதல் நடத்த வேண்டிய பொருளின் நகர்வை துள்ளியமாக கண்காணித்து, ஏவுகணைகளை பிரயோகிக்கும்.

1990-களில் வியூகம் வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் குண்டுவீச்சுக்கள்; ஆரம்ப எச்சரிக்கையை துல்லியமாக கண்டறிதல்; உளவுத்துறையால் பயன்படுத்தப்படும் F-16 மற்றும் F-22 போன்ற போர் விமானங்கள்; டமாஹாக் போன்ற ஏவுகணைகளை அழித்தல் என பல்வேறு நன்மைகளை ஒன்றே தாங்கி நிற்கும் ஏவுகணை சிஸ்டத்தை ரஷியா கட்டமைத்தது. 2007-ல் அந்நாட்டு ராணுவத்தில் இடம்பெற்றது. ரஷிய படைகள் குறைந்தபட்சம் அரை டஜன் எஸ்-400 ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இவற்றில் இரண்டை மாஸ்கோவின் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தியுள்ளது.

இதுபோன்று ரஷிய ராணுவம் போரில் ஈடுபட்டுள்ள சிரியாவில் குறைந்தபட்சம் இரண்டு எஸ்-400 ஏவுகணைகளை ரஷியா நிலை நிறுத்தியுள்ளது. ஒரே எஸ்-400 சிஸ்டத்தில் 8 லாஞ்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். 16 ஏவுகணைகளை உடனடியாக ரீ-லோட் செய்ய முடியும். 400 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தாக்குதலை முன்னெடுக்க முடியும். மணிக்கு 17 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாய்ந்துசென்று, எதிரி ஏவுகணைகளை இலக்குமீது துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். அமெரிக்காவின் எப்.-35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்கள்கூட இந்த ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது.

சீன தயாரிப்பான ஜே-20 ரக போர் விமானங்களுக்கும் இதே நிலைதான். 5 நிமிடங்களில் தாக்குதலுக்கு தயாராகலாம். 2019-ம் ஆண்டுக்குள் இந்த 5 இடைமறி ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது

ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. விமானப்படை தளபதி தனோவா பேசுகையில், ரபேல் விமானங்களை தவிர ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளும் மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ரபேல் போர் விமானங்களும், எஸ்-400 ரக ஏவுகணைகளும் விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை வாங்குவதில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக கையெழுத்தாவது குறித்து பார்க்க வேண்டும். இருப்பினும் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது,” என்றார். இந்தியாவை போன்று துருக்கியும் ரஷியாவிடம் இருந்து இவ்வகை ஏவுகணைகளை வாங்குகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டி வருகிறது.