விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அடுத்து மும்பை கடற்கரையில் செத்து ஒதுங்கிய மீன்கள், ஆமைகள்!

Read Time:4 Minute, 16 Second

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அடுத்து மும்பை கடற்கரையில் மீன்கள், ஆமைகள் செத்து கரை ஒதுங்கியது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் தேதி கொண்டாடப்பட்டது. மராட்டியத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அடுத்து கடலில் சிலைகள் கரைக்கப்பட்டது. சிலைகள் கரைக்கப்பட்ட போது லட்சக்கணக்கான பால் பாக்கெட் கவர்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களும் கடலில் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து மும்பை மாநகராட்சியும், தொண்டு நிறுவனங்களும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். அப்போதுதான் அதிர்ச்சியான சம்பவங்களை பார்க்க நேரிட்டுள்ளது.

கடற்கரை பகுதி மிகவும் மாசுப்பட்டது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மீன்கள், ஆமைகள் மற்றும் தண்ணீர் பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது. இது மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை எதிர்க்கொள்ள மும்பை மாநகராட்சியும், தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு வருடமும் போராடிதான் வருகிறது.

செயற்கை வர்ணப்பூச்சி கொண்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது. ஆனால் இதுபோன்ற சிலைகளே கரைக்கப்பட்டுள்ளது.

சென்னையை அசத்திய சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்!

சிலைகளில் உள்ள அதிகப்படியான இரசாயனங்கள் நீர்வாழ் உயிரினங்களை மட்டும் அழிக்கவில்லை, இதுபோன்ற சிலைகள் உடைந்து கரையாமல் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு ஒரு துயரமான பார்வையாக இருக்கிறது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் செய்யப்பட்ட சிலை, செத்து கிடக்கும் மீன்கள்…

சதுர்த்தியின் போது மும்பை கடற்கரையை பாதுகாப்போம் என்று பிரசாரம் மேற்கொண்ட இயற்கை ஆர்வலர் கவாத்ரா பேசுகையில் ,

“பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் காரணமாக மீன்கள், ஆமைகள் மற்றும் தண்ணீர் பாம்புகள் இறந்துள்ளது.”

இதுபோன்று பூக்கள் மற்றும் பூஜையின் போது கடலில் விசப்பட்ட பொருட்களாலும் பாதிப்பு நேரிட்டுள்ளது. சிலைகளின் வண்ணப்பூச்சுகளில் உள்ள குரோமியம், ஈயம், அலுமினியம் மற்றும் தாமிரம் உள்ளது. இந்த நச்சுக்கள் தண்ணீரில் கலந்துள்ளது. இது மீன்களை மூச்சுவிட முடியாத நிலைக்கு தள்ளுகிறது, என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளையும் மீட்டு மாநகராட்சியிடம் வழங்கியுள்ளது.

வேதிப் பொருளால் செய்யப்பட்ட சிலைகளையும் நீர் நிலைகளில் கரைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும், ஆனால் இது தொடர்வது மிகவும் வேதனைக்குரியது, இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து பொதுமக்களும் இதுபோன்ற சிலைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சிலைகள் தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதனை தடுக்க அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.