தருமபுரியில் அரசுப் பள்ளி வளாகத்தில் 18 மரங்கள் வேருடன் அகற்றி வேறு இடத்தில் மறுநடவு!

Read Time:3 Minute, 16 Second

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த 18 மரங்கள் அகற்றப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உண்டு உறைவிடப் பள்ளி தற்காலிகமாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பின்தங்கிய பகுதிகளுக்காக அமைக்கப்படும் உண்டு உறைவிடப் பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 100 மாணவ – மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 

புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் வளர்ந்த 15 புளி மற்றும் 3 வேப்பம் மரங்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தது. கடந்த காலங்களில் மரங்களை வெட்டியதன் விளைவாக மழையின்றி தவிப்பதை கருத்தில் கொண்டு, 18 மரங்களையும் வெட்டி அகற்றி வீணாக்கிவிடாமல் அவற்றை வேருடன் அகற்றி வேறிடத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.  மாவட்ட கல்வி நிர்வாகமும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி சனிக்கிழமை 18 மரங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டது.

பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மரங்களை சுற்றிலும் ஆழமாக தோண்டப்பட்டது. மரங்களின் வேர்களில் எந்தஒரு பாதிப்பு ஏற்படாத வகையில் நேர்த்தியான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் மறுநடவு செய்ய தேர்வு செய்யப்பட்ட பகுதியில் ஆழமாக தோண்டப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. இதற்கிடையே வேருடன் எடுக்கப்பட்ட மரங்களில் தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்குப்பைகள் சுற்றப்பட்டது. அவை மறுநடவு செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு நடப்பட்டது. 

இந்த மரங்களை தண்ணீர் விட்டு வளர்க்கும் பணி அந்தப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்டம், பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றங்களின் பொறுப்பில் வழங்கப்பட்டது.

மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் மறுநடவு செய்யும் பணியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மாவட்ட கல்வி நிர்வாகம், தருமபுரி மக்கள் மன்றம் மற்றும் தளிர்கள் அமைப்பினர் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். இயற்கையை அழிப்பதால் மழையின்றி தவிக்கிறோம், எனவே இதுபோன்ற முயற்சியை மேற்கொள்கிறோம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயற்கையின் உதவியுடன் இம்மரங்கள் செழித்து வளர வேண்டும்.