இந்தியாவில் மதுவால் ஆண்டுக்கு 2.6 லட்சம் பேர் உயிரிழப்பு

Read Time:4 Minute, 43 Second

இந்தியாவில் மது அருந்துவதால் ஆண்டுக்கு 2.6 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என உலக சுகாதார மைய அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் மக்களுடைய உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்க கூடியவற்றில் முதன்மையாக மதுவே இருக்கிறது. மதுவால் கருத்தரித்தல் மற்றும் குழந்தை பிறப்பில் பாதிப்பு, தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள், மனநல பாதிப்பு, காயங்கள், நஞ்சு உட்கொள்ளுதல் போன்ற நேரடியான பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதுபோல சாலை விபத்துக்களுக்கும் காரணமாகிறது. விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போதிலும் பலன் இல்லாத நிலையே நீடிக்கிறது.

அரசு ஏன் விற்கிறது? விளைவுகள் தெரிந்தும் குடிப்பது ஏன்? என்ற விவாதங்களுக்கு இடையே இந்தியாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்துதான் செல்கிறது.

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016 ம் ஆண்டில் உலம் முழுவதும் மதுவால் 30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1.32 கோடி பேருக்கு உடல் ஊனக் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. உடல் ஊனக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பொருத்தவரையில், ஆண்கள் 1.6 கோடியாகவும், பெண்கள் 26 லட்சமாகவும் உள்ளனர். காச நோய், எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை காட்டிலும் மதுவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.6 லட்சம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மது அருந்துவதால் ஆண்டுக்கு 2.6 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்

என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்கள், புற்றுநோய் பாதிப்புக்கள் மற்றும் கல்லீரல் கோளாறு என உயிரிழப்புக்களை ஏற்படுத்துகிறது.

* இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் உயிரிழப்புகளில் 1 லட்சம் உயிரிழப்பிற்கு மதுதான் காரணமாக உள்ளது.

* ஒவ்வொரு வருடமும் புற்றுநோய் பாதிப்பால் 30 ஆயிரம் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது, இதன் பின்னாலும் மது விஷமாக உள்ளது.

* மதுவால் கல்லீரல் பாதிப்பு பெரும் சுகாதார பிரச்சனையாக உள்ளது, இதனால் 1.4 லட்சம் வரையிலான உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

இருமடங்காக அதிகரிப்பு

உலக அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு என்பது கடந்த 2000 முதல் 2005-ம் அண்டு வரை ஒரு நிலையான அளவில் இருந்தது. அதன் பிறகு, 2005-இல் 5.5 லிட்டராக இருந்த ஒருவரது மது அளவு, 2010-ம் ஆண்டில் 6.4 லிட்டராக அதிகரித்துவிட்டது. 2016-வரையிலும் இதே நிலைதான் தொடர்ந்து காணப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டில் தனிநபர் மது அருந்தும் அளவு 2.4 லிட்டராக இருந்தது. அது கடந்த 2016-ம் ஆண்டில் 5.7 லிட்டராக அதிகரித்துவிட்டது.

இதில் ஆண்கள் 4.2 லிட்டர் மதுவும், பெண்கள் 1.5 லிட்டர் மதுவும் எடுத்துக் கொள்கின்றனர். இது மேலும் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மிகப்பெரும் சவாலாக எழுந்துள்ளது என்றே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. மது விவகாரத்தில் அரசுக்கள் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், அதனை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இவ்விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றதாழ்வு காணப்படுகிறது. மராட்டியத்தில் மது அருந்துவதற்கு உச்ச வயது வரம்பு 25 ஆக இருக்கிறது, தமிழகத்தில் 21 ஆக உள்ளது. ஆனால் கோவா, புதுச்சேரியில் 18 ஆக உள்ளது. இப்போது மத்திய அரசு இவ்விவகாரத்தில் ஸ்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள்.