தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Read Time:2 Minute, 57 Second

தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவிழந்ததால், தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வானிலை குறித்து அவ்வபோது தகவல்களை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன், தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து வரும் காற்று மோதிக் கொள்வதால், இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த ஒரு மாதமாக மழை நின்றுள்ளது, அங்கும்  மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக மழை ஏற்படுகிறது.  

மழை பெய்ய தொடங்கும் போது அதிகமான காற்று முதலில் வீசக்கூடும் அதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள்மாவட்டங்களில் காற்று பலமாக வீசும் என எதிர்பார்க்கலாம். இந்த மழை ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதிகளில் மழை பெய்யலாம். ராமநாதபுரம் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

வடதமிழகம் மற்றும் சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மக்கள் உயரமான கட்டிடங்களில் ஏறி நிற்பது, மரங்களின் கீழ் நிற்பது, இரும்பு தூணின் கீழும் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.