அம்பானிக்காக அரசு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் அவமதிப்பு…!

Read Time:10 Minute, 25 Second

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (எச்.ஏ.எல்.) ஊழியர்களை மிகவும் கோபம் மற்றும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

கூட்டுத் தயாரிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தை நீக்கிவிட்டு மத்திய அரசு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் ஹலாண்டேவிடம் இருந்து இத்தகவல் வெளியாகியது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள் என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டியவை

இதுதொடர்பான சர்ச்சை நீடித்த போது மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையிலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் விவகாரத்தில் இந்திய அரசு நிறுவனத்தை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுதான் அம்பானியை சேர்த்தது – பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டே

இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் தொடர்ந்த நிலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ மறுப்பு தெரிவித்தார். “இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நான்காம் தலைமுறை போர் விமானமான சுகோய்–30 ரக போர் விமானங்களையே தயாரித்து உள்ளது, ரபேல் விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது என்றார் ராஜூ.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் ஊழியர்கள் எதிர்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் ஒப்பந்தம் மற்றும் நிர்மலா சீதாராமனின் பேச்சு நிறுவனத்தின் ஊழியர்களை மிகவும் கோபம் மற்றும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

எச்.ஏ.எல். நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தி டெலிகிராப் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசுகையில் “ஒரு வருடத்தில் 30 ரபேல் போர் விமானங்களை உருவாக்கும் திறன் மற்றும் தொழில்நுட்ப திறனை நாங்கள் கொண்டுள்ளோம். ஏற்கனவே செய்து கொடுக்க ஒப்புக்கொண்ட விமானங்களை செய்துக் கொடுத்த பின்னர் எங்களால் கூடுதல் ரபேல் விமானங்களையும் தயாரிக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.

எச்.ஏ.எல். நிறுவனத்தின் யூனியன் அதிகாரி பேசுகையில்,

“எங்களுடைய தொழிற்சாலைக்கு வராமல் எப்படி நிர்மலா சீதாராமன் இதுபோன்று பேசலாம்?”

இங்கே பணிபுரியும் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் மனதை இதுபோன்ற ஒரு அறிக்கை நொறுங்க செய்யும் என்பதை அவர் யோசிக்கவில்லையா? பெங்களூரில் உள்ள எங்களுடைய தொழிற்சாலையில் 9000 தொழிலாளர்கள் மற்றும் 5,000 பொறியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மிகவும் திறன்பெற்றவர்கள். மேலும் இதுபோன்று 4,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் இரண்டாம் பங்கை வகிக்கின்றனர்,” என்ற கோபத்தை பதிவு செய்துள்ளார்.

எம்.ஆர்.ஓ. (maintenance, repairs and overhauls) மூலம் எங்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவு தொகையில் நாங்கள் சிறப்பான வெளிப்பாடையே கொடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் மிரேஜ் 2000, ஜாகுவார், சூர்யா கிரான் விமானங்களையும் மற்றும் சிட்டாக், செடாக் போன்ற அதிநவீன் ஹெலிகாப்டர்களையும் தயாரித்து வருகிறது, இவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களையும் செய்து வருகிறது.

அனைத்து போர்களிலும் நாம் கண்டதை போல, பிரச்சனையான நேரங்களில் பொதுத்துறை நிறுவனம் மட்டுமே உடனிருக்கும் என்பதை மத்திய அரசு உணரும். 1971 போரின் போது எச்.ஏ.எல். தொழிலாளர்கள் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை போரின் போது வலுவான முறையில் பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்ய கூடுதல் நேரம் பணியாற்றினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எச்.ஏ.எல். நிறுவனத்தின் மூத்த பொறியாளார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்துள்ள பேட்டியில், “ரபேல் போர் விமானம் தயாரிப்பில் ஆஃப்செட் பங்குதாரராக ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் 30% முதலீடு அதாவது ரூ. 60,000 கோடி அளவில் எங்களுக்கு கிடைக்கும், இதனால் இங்கிருக்கும் வசதியை மேலும் மேம்படுத்துவிடலாம். முந்தைய காலங்களிலும் நாங்கள் போர் விமானங்களை தயாரித்து வழங்கியுள்ளோம், எங்களால் ரபேல் போர் விமாங்களையும் தயாரிக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவில் ‘முழுமையான’ ‘திட்டத்தை உருவாக்கும் அத்தகைய அத்தியாயங்கள் காரணமாக இது மோசமாக உள்ளது. நவரத்தின பிஎஸ்யூவின் ஒரு உற்பத்தித் திட்டத்தை ஒரு புதுமையான தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் ஒரு அரசாங்கத்தை உண்மையில் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்த முடியாது, “என ஊழியர் தெரிவித்தார்.

மற்றொரு ஊழியர் பேசுகையில், “இதுபோன்ற நகர்வு “மேக் இன் இந்தியா” திட்டம் போலியானது என்பதையே காட்டும்.

தனியார் நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸின் உற்பத்தி திறனை அரசால் உண்மையாகவே ஊக்குவிக்க முடியாது,”

என விமர்சனம் செய்துள்ளார். இது தினசரி நடக்கும் ஒருநாடகம்தான் என மற்றொரு பொறியாளர் கூறுகிறார்.

“நிறுவனத்தின் திறமைகளை மேம்படுத்துவதற்கு உதவும் திட்டங்களை மறுத்தால், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் எவ்வாறு சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட முடியும்?”

என்று அந்த பெண் பொறியாளார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விமானப்படை எப்போதும் “வெளிநாட்டு பொம்மைகளைதான்” விரும்பியது என்றும் குறிப்பிடுகிறார்.

“ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த தேவையான நிதிகள் வேறு எங்கேயோ செல்கிறது, ஊழியர்கள் ஏமாற்றப்படுவதாக உணர்கிறார்கள், கோபம் கொள்கிறார்கள்,” என வேதனையையும் குறிப்பிடுகிறார்கள். “நாசிக் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் உள்ள எங்களுடைய தொழிற்சாலைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களில் அரசின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. எங்களை அரசாங்கம் புறக்கணிக்கிறது என்று பார்க்கிறோம்,

எங்களுடைய திறமை மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லையென்று உணர்கிறோம்,”

என்றும் பொறியாளர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு 127 விமானங்கள் தேவையென்ற நிலையில் வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இப்போது ரபேல் போர் விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வசதியை (transfer of technology, ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனத்திற்கு தொழில்நுட்ப தகவலை மாற்றிக்கொள்வது) பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் தனது துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்தை பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

நவரத்னா நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய மிக முக்கியமான ஒப்பந்தம், முன் அனுபவம் இல்லாது, திடீரென தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர் நிறுவனத்திற்கு ஏன் வழங்கப்பட வேண்டும்? எங்களைவிட யாருக்கும் தேச பக்தி கிடையாது என மார்தட்டும் பா.ஜனதாவிற்கு தனியார் நிறுவனம் மீதான பாசம் என்ன விதமான தேசபக்தியோ? என்ற கேள்வியே எழுகிறது.