இந்திய பெருங்கடலில் 3 நாட்களாக தத்தளித்த இந்தியக் கடற்படை வீரர் மீட்பு

Read Time:4 Minute, 13 Second

கோல்டன் க்ளோப் ரேஸில் மோசமான வானிலை காரணமாக காயமடைந்து கடலில் சிக்கிகொண்ட இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் பாரம்பரிய போட்டி பிரான்சில் கடந்த ஜூலை 1 -ம் தேதி தொடங்கியது. சுமார் 30 ஆயிரம் மைல் தூரம் கடலில் பயணிக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கேரளாவை சேர்ந்த இந்திய கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமி கலந்துக்கொண்டார். இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட எஸ்.வி துரயா படகில் 84 நாட்களில் சுமார் 10 ஆயிரம் மைல் கடந்து போட்டியில் 3 இடத்தில் டோமி இருந்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, மோசமான வானிலை காரணமாக அவரது படகு விபத்தில் சிக்கியது.

கடும் கடல் சீற்றத்துடன் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 14 மீட்டர் உயரம் வரையில் அலையும், கனமழையும் தொடர்ந்த நிலையில் அவருடைய படகு முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் அவருக்கும் முதுகுபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய நிலை என்னவென்று தெரியாத நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. சனிக்கிழமை அபிலாஷ் டோமி அவசரகால கருவியின் (EPIRB) உதவியுடன் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.

“EPIRB-ஐ செயல்படுத்தியுள்ளேன், என்னால் நடக்க முடியவில்லை. ஸ்ட்ரெச்சர் தேவை,” என்று தகவல் அனுப்பினார்.

இதற்கிடையே அபிலாஷ் டோமியை தேடும் பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியது, ஆஸ்திரேலியாவிடமும் உதவி கோரியது. உடனடியாக இந்தியாவுக்கு உதவியாக ஆஸ்திரேலியா கடற்படையும் களமிறங்கியது. அவரை தேடும் பணியில் இறங்கிய இந்திய கடற்படையின் P8-I விமானம் அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் கடற்கரையில் இருந்து 1900 நாட்டிக்கல் மைல் பகுதியில் உள்ளார் என தெரியவந்தது. அவருடைய சிதைந்த படகின் புகைப்படங்களையும், வெளியிட்டது. கனமழையுடன் காற்று என்ற மோசமான நிலையில் விமானம் திரும்பியது.

தேசமடைந்த படகு.

அபிலாஷ் டோமியை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சாட்புரா மற்றும் ஐ.என்.எஸ் ஜோதி ஆகிய கப்பல்கள் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்தது. ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான கப்பல் HMAS Ballarat அங்கு விரைந்தது. விமானங்களையும் ஆஸ்திரேலியா மீட்பு பணிக்கு அனுப்பியது. HMAS Ballarat கப்பலில் தேவையான மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கிருக்கும் பிரெஞ்சு கப்பல் Osiris விரைவில் அவரை மீட்கிறது என்று இந்திய கடற்படையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவர் மீட்கப்பட்டுள்ளார். தேவையான மருத்துவ வசதிகளை கொண்ட Osiris கப்பலில் அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் HMAS Ballarat கப்பலுக்கு கொண்டு செல்லப்படுகிறார். 30 ஆயிரம் மைல் தூரத்தை கடந்து உலகை சுற்றி வந்த ஒரே இந்தியர் அபிலாஷ் டோமி என்பது குறிப்பிடத்தக்கது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்துக்கொண்ட அபிலாஷ் டோமி, இரண்டாவது முறையாக போட்டியில் கலந்துக்கொண்டார்.