பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு மேலும் சோதனை! ஜப்பான் நிதியை நிறுத்தியது

Read Time:4 Minute, 38 Second

பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு மேலும் சோதனையாக ஜப்பான் நிறுவனம் நிதியை நிறுத்தியது.

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. புல்லட் ரெயில் சேவையை வரும் 2022 ஆண்டு சுதந்திர தினத்தன்று இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜேஐசிஏ) ரூ. 80 ஆயிரம் கோடியை கடனாக வழங்குகிறது. மத்திய அரசின் தேசிய அதிவேக ரெயில்வே துறை (என்எச்ஆர்சிஎல்) சார்பில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.  

குஜராத், மராட்டியத்தில் புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மராட்டியத்தில் எதிர்ப்பு வலுத்த நிலையில் என்எச்ஆர்சிஎல் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் ஆயிரம் விவசாயிகள் உயர்நீதிமன்றம் சென்றுள்ளார்கள். என்எச்ஆர்சிஎல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அடிப்படை பணிகளை திட்டமிட்டப்படி முடிப்பதில் தொய்வு நேரிட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில், இப்பிரச்சனைகளை முதலில் தீருங்கள் என்று நிதி வழங்குவதை ஜேஐசிஏ நிறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 1,000 விவசாயிகள் மனு தாக்கல்!

புல்லட் ரெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் இங்கிருக்கும் நிலையை பார்க்க வாருங்கள் என்று குஜராத் மாநிலத்திற்கான ஜப்பான் தூதருக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும்போது சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவலை தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று ஜேஐசிஏவிற்கு கடிதம் எழுதிய விவசாயிகள் தரப்பில், இவ்விவகாரத்தில் வழிகாட்டு நெறிகள் பின்பற்றுவதற்கு முன்னதாக “இந்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தவணையை தொகையை நிறுத்தி வையுங்கள்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து புல்லட் ரெயில் திட்டத்திற்கு தவணை தொகையை வழங்குவதை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 “சமீபத்திய சம்பவங்கள் ஜப்பான் நிறுவனத்திற்கு சிறிய அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. நிதிவழங்கும் ஜேஐசிஏ இப்போது மேற்கொண்டு தவணைத்தொகையை வழங்க மறுத்துவிட்டது. இவ்விவகாரத்தை கவனிக்க சிறப்பு குழுவை அமைக்க பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது,” என நிதியமைச்சக அதிகாரி தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் அமைக்கும் குழுவில் நிதி அயோக், நிதி அமைச்சகம், குஜராத் மற்றும் மராட்டிய மாநில மூத்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 “நிதி விவகாரம் இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகும். ஜேஐசிஏ தவணைத் தொகையை வழங்கவில்லை. அவர்கள் விவசாயிகள் போராட்டத்தை முதலில் சரிசெய்ய சொல்கிறார்கள். இது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது, திட்டம் மேலும் காலதாமதத்தை எதிர்க்கொள்ளும். மாநில அரசுக்களும் நிதி பிரச்சனையை எதிர்க்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு நிதியை அதிகரிக்கும் எண்ணம் இல்லையென்பதை மத்திய நிதியமைச்சகம் ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டது,” என நிதியமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.