பக்தனை ‘வா’ என அழைத்து அருள்கிறார்! அருள்மிகு அழகிய சிங்கர் சுவாமி…

Read Time:3 Minute, 54 Second

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி பற்றி இன்று பார்க்கலாம்.

ஐஸ்வர்யம் அருளும் பார்த்தசாரதி தரிசனம்…

5 திவ்வியதேச பொருமாள்கள் அருள்புரியும் திரு பார்த்தசாரதி சுவாமி கோவிலில், பார்த்தசாரதி சன்னதிக்கு நேர் பின்புறமாக அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி சன்னதியுள்ளது. மேற்கு நோக்கி தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் யோக நரசிம்மருக்குதான் முதல் பூஜை நடக்கிறது. இங்கு மேற்கு நோக்கிய வாசலுடன் தனி கொடிமரம் கொண்டு பக்தர்களை அழைத்து அருள்புரிகிறார் திரு யோக நரசிம்மர்.

பெருமாள் தரிசனம் வேண்டி கடும் தவம் புரிந்த அத்திரி முனிவருக்கு பிருந்தாரண்ய ஷேத்திரத்தில் (திருவல்லிக்கேணி) ஹிரண்ய வதத்திற்குப் பிறகு உக்கிரம் தணிந்த நிலையில் காட்சியளித்தார்.

சன்னதியில் மூலவர் நரசிம்மர் யோக நிலையில் அருள்புரிகிறார். கருவறையில் இருக்கும் உற்சவர் அழகிய சிங்கர், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கருணையின் கடலாக காட்சியளிக்கிறார். சிம்ம முகத்தில் இருந்து தெளிந்து, என்னை பார்த்து பயம் கொள்ள வேண்டாம் என்று தெள்ளிய சிங்கராக காட்சியளிக்கிறார் நரசிம்மர்.

சன்னதியில் நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் கதவில் உள்ள மணிகளில் நாக்கு இருக்காது. அழகிய சிங்கர் தன் இடது கை ஆள்காட்டி விரலால் அழைத்து, வலது கரத்தால் அபயமளிக்கிறார். அவருடைய இச்சேவையை ஆஹ்வான ஹஸ்தம் (அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷ்கிறேன் என்பதாகும்.) என வர்ணிக்கிறார்கள். யோக நரசிம்மர் தன்னை வந்து சேவிக்கும் எல்லா பக்தர்களுக்கும் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கிறார். கல்வியில் சிறந்து விழங்கவும், மன நிம்மதி பெறவும் அருள் புரிகிறார்.

இவருடைய சன்னதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை.

பக்தர்கள் நோய், நொடிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோவிலில் உப்பு மற்றும் மிளகு சேர்க்கிறார்கள். வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அவருடைய சன்னதியை சுற்றி வலம் வருகிறார்கள். “தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே” என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட அருள்மிகு திரு யோக நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து, நலம் பெறுவோம்.

விழாக்கள்

பார்த்த சாரதி கோவிலில் திரு யோக நரசிம்மருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடக்கிறது. அத்திரி முனிவருக்கு காட்சியளித்த சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் விதிஉலா வருகிறார். மாசி மாதம் தெப்ப உற்சவம் நடக்கிறது. வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் கோவிலில் உற்சவம் நடக்கிறது. கோவிலில் உள்ள பிற மூன்று பெருமாள்கள் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம். ஸ்ரீ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.